சுற்றுலாப் பயணிகள் வீசும் துரித உணவுகளை உண்டு, உடல்பருமனால் அவதிப்பட்டு வந்த தாய்லாந்து குரங்கு மீட்கப்பட்டு, அதற்கு கடுமையான உணவுக் கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தாய்லாந்துக்கு அதிகம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் காடுகளில் சுற்றித் திரியும் குரங்குகளால் ஈர்க்கப்படுகின்றனர்.
அவற்றுடன் விளையாடும் பயணிகள், குரங்குகளுக்கு உணவுகளையும் அளிக்கின்றனர். துரித உணவுகளையும், சோடா பானங்களையும் தொடர்ச்சியாக உண்ணும் குரங்குகள் உடல் பருமனுக்கு ஆளாகின்றன.
சமூக ஊடகங்களில் பிரபலமான குரங்கு
அத்தகைய ஒரு குரங்கின் புகைப்படம் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் பிரபலமானது. இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அந்தக் குரங்கைப் பிடித்துப் பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்துப் பேசிய வனத்துறை அதிகாரி கச்சா புகெம், ''அந்தக் குரங்கு உடல் பருமனால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதுதான் அந்தப் பகுதியில் இருந்த மற்ற குரங்குகளின் தலைவனாகவும் இருந்தது. மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே அதைப் பிடிக்க முடிந்தது.
சாதாரணமாக குரங்குகள் 9 கிலோ வரை எடை கொண்டிருக்கும். கொழுப்பால் பாதிக்கப்பட்ட குரங்குகளுக்கு சுமார் 3 மடங்கு வரை எடை கூடும். பிடிபட்ட குரங்கு சுமார் 26 கிலோ எடை இருந்தது.
மற்ற குரங்குகளே அதற்கு உணவு கொண்டு வந்து அளித்துக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் குட்டிக் குரங்குகளுக்கும் அந்தக் குரங்கு உணவைப் பகிர்ந்து அளித்து வந்தது'' என்றார்.
குரங்குக்கு டயட் முறையை மேற்கொள்ளும் கால்நடை மருத்துவர் பேசும்போது, ''அந்தக் குரங்கு ஆபத்தான நிலையில் உள்ளது. அதற்கு எப்போது வேண்டுமானாலும் இதய நோயும், நீரிழிவும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
தற்போது 400 கிராம் புரதம், பழங்கள், காய்கறிகள் ஆகியவை மட்டுமே ஒரு நாளுக்கு இரு முறை வழங்கப்படுகின்றன'' என்று தெரிவித்தார்.