இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டணிக்கு எதிராக தமிழ் கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணியை உருவாக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஈ.பி.டி.பி. கட்சியை சேர்ந்த நெல்சன் எதிரிசிங்க கூறுகையில், “புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.
தமிழ்த் தேசிய கூட்டணிக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் இந்த புதிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் எனக் கூறப்படுகிறது. இக்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற் காக இலங்கை அரசு அமைத்துள்ள நாடாளுமன்றத் தேர்வுக் குழு கூட்டத்தில் இந்த புதிய கூட்டணி பங்கேற்கும் எனத் தெரிகிறது. அரசியல் ரீதியான தீர்வை எட்டும்வகையில் இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக ஈ.பி.டி.பி. தரப்பில் கூறப்படுகிறது.
ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவா னந்தா, அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர் என்பதும், அவரின் அரசில் அமைச்சராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக நாடாளுமன்றத் தேர்வுக் குழு கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டணி அறிவித்திருந்தது.