உலகம்

தேவயானி கைதால் இரு தரப்பு உறவு பாதிக்காது: அமெரிக்கா நம்பிக்கை

செய்திப்பிரிவு

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தால், இரு தரப்பு உறவு பாதிக்காது என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவின் ஆடைகளை களைந்து சோதனையிட்ட நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் ஜே கானரி வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசும்போது, இந்தியத் துணைத் தூதர் தேவயானி மீதான நடவடிக்கையை தனித்துவிடப்பட்ட நிகழ்வு என்று குறிப்பிட்டார். அந்த நிகழ்வால், இந்தியா உடனான அமெரிக்க உறவில் பிரதிபலிக்காது என்றார்.

இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து அமெரிக்க தரப்பு பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தேவயானி மீதான நடவடிக்கை தொடர்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளை உணர்ந்து கொண்டுள்ளதாகவும், அந்த நடவடிக்கைக்கு வருந்துவதாகவும் மேனனிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மதிப்பும், கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பதைப் போலவே, பிறநாட்டு தூதரக அதிகாரிகளின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டியதும் அவசியம் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்பாரதவிதமாக நடந்த தேவயானியின் கைது விவகாரத்தால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு பாதிக்கப்படுவதை அமெரிக்கா அனுமதிக்காது என்றும் ஜெர்ரி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த போதிலும், இந்த விவகாரத்தில் மன்னிப்புக் கோர அமெரிக்க அரசு மறுத்துள்ளது.

SCROLL FOR NEXT