ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரும், தனது அபாரமான நகைச்சுவை நடிப்பில் ரசிகர்களை வசீகரித்தவருமான ராபின் வில்லியம்ஸ் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.
தெற்கு கலிஃபோர்னியாவின் டிபூரனில் உள்ள இல்லத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மரணத்துக்கு தற்கொலையே காரணமாக இருக்கக் கூடும் என்று உள்ளூர் காவல் துறை சந்தேகிக்கிறது. எனினும், அவரது மரணத்துக்கான காரணம் குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
அதேவேளையில், ராபின் வில்லியம் சமீப காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக, அவரது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
"என் கணவர் - சிறந்த நண்பரை இன்று காலை இழந்துவிட்டேன். இந்த உலகம் அன்புக்குரிய கலைஞரையும், அன்பான மனிதரையும் இழந்துவிட்டது. என் இதயம் நொறுங்கிவிட்டது" என்று ராபின் வில்லியம்ஸ்சின் மனைவி சூசன் ஷைனிடர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக மன அழுத்த பாதிப்புக்கு உள்ளான ராபின் வில்லியம்ஸ், கடந்த 1997-ல் வெளிவந்த 'குட் வில் ஹன்டிங்' படத்தின் நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றவர். அப்படத்தில் ராபின் வில்லியம்ஸ் மனக் கோளாறுகளுக்கு சிகிச்சை தரும் நிபுணராக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியது கவனிக்கத்தக்கது.
நடிகர் கமல்ஹாசனின் 'அவ்வை சண்முகி'க்கு மூலமான 'மிசஸ் டவுட் ஃபயர்', முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்துக்கு மூலமாகக் கருதப்படும் 'பேட்ச் ஆடம்ஸ்', சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த 'நைட் அட் தி மியூஸியம்', 'ஜூமான்ஜி', 'ரோபோட்ஸ்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ராபின் வில்லியம்ஸ்.
தனது நகைச்சுவை உணர்வுமிக்க நடிப்பாற்றலாலும், கதாபாத்திரங்களாலும் ரசிகர்களை மகிழ்வித்த கலைஞனின் கடைசி காலம் துயர்மிகுந்ததாக இருந்திருக்கிறது என ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் சோகத்துடன் இரங்கல் தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர்.
நகைச்சுவையுடன் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் ரசிகர்களைக் கட்டிப்போடும் நடிப்பாற்றல் மிக்க ராபின் வில்லியம்ஸின் மறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சக நகைச்சுவை நடிகரான ஸ்டீவ் மார்ட்டின் "மிகச் சிறந்த திறமைசாலியும், நடிப்புத் தோழரும், மகத்தான உள்ளமும் கொண்ட ராபின் வில்லியம்ஸின் இழப்பு என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ஒபாமா இரங்கல்:
ராபின் வில்லியம்ஸ் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் "ராபின் வில்லியம்ஸ் ஒரு டாக்டராக, பைலட்டாக, அற்புத பூதமாக (ஜீனி), பேராசிரியாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும் நடிப்பில் அவருக்கு நிகர் அவரே. யாரோ ஒரு நபராக நமக்கு அறிமுகமான ராபின் காலப்போக்கில் மனித உணர்வுகள் அத்தனையும் தொட்டு நம்மை ஆட்கொண்டார். நம்மை சிரிக்க வைத்தார், அழ வைத்தார். தனது திறமைகளை தாராளமாக வாரி இறைத்து உலகின் ஏதோ ஒரு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் நம் படையினரையும் சரி, உள்நாட்டில் சாலையோரம் திரிந்த ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்கும் சரி மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்தார். ஒபாமா குடும்பத்தினர் சார்பில் ராபின் வில்லியம்ஸ் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு ஒபாமா தெரிவித்துள்ளார்.