அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான என்.எஸ்.ஏ. தொழில் துறையையும் உளவு பார்க்கிறது என்று இதன் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் (30) தனது புதிய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவரது பேட்டியை ஜெர்மனியின் ஏ.ஆர்.டி. டி.வி. ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளிபரப்பியது. இதில் ஸ்னோ டென் கூறுகையில், “ஜெர்மன் பொறியியல் நிறுவனமான சீமென்ஸ் வைத்துள்ள தகவல்கள் அமெரிக்காவுக்கு உதவும் என்று என்.எஸ்.ஏ. கருதுமானால், அவை தேசிய பாதுகாப்புக்கு தேவை யில்லை என்றாலும் கூட, அவற்றை என்.எஸ்.ஏ. தொடர்ந்து பயன்படுத்தும்” என்றார்.
ஆனால் இந்தத் தகவல்களை என்எஸ்ஏ எவ்வாறு பயன்படுத்து கிறது என்பது பற்றி ஸ்னோடென் கூறமறுத்துவிட்டார். “இதுபற்றி பத்திரிகையாளர்கள் கூறுவதற்கு முன் நான் எதுவும் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார் ஸ்னோடென்.
அமெரிக்கா என்னைக் கொல்ல விரும்புகிறது
அவர் மேலும் கூறுகையில், “என்.எஸ்.ஏ. ஆவணங்கள் எதுவும் என்னிடம் தற்போது இல்லை. என்னிடம் இருந்த அனைத்து ஆவணங் களையும் பத்திரிகையாளர் சிலரிடம் கொடுத்துவிட்டேன். இதற்கு மேல் ஆவணங்களை வெளியிடவும் எனக்கு செல்வாக்கு இல்லை” என்றார்.
“அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் என்னைக் கொல்ல விரும்புகின்றனர். ஓர் இணைய தளத் தகவல் வாயிலாக இதனை நான் தெரிந்துகொண்டேன்” என்றும் ஸ்னோடென் கூறினார்.