பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் வீடு அருகே துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் கண்டறியப்பட்டன.
‘சில தினங்களுக்கு முன் முஷாரப் நீதிமன்றம் செல்லும் வழியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போதும் வெடிப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, முஷாரபின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உறுதிப்படுத்துகிறது’ என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சாக் ஷாஸாத் பகுதியில் உள்ள முஷாரபின் பண்ணை வீட்டுக்கு அருகில் 5 பொட்டலங்களில் வெடிப்பொருள்கள் கண்டறியப்பட்டன. ஒவ்வொரு பொட்டலத்திலும் சுமார் 400 முதல் 500 கிராம் வரை வெடிப்பொருள்கள் இருந்தன. இரு கைத்துப்பாக்கிகள், 5 மீட்டர் டெட்டனேட்டர் கம்பிவடம், 16 துப்பாக்கிக் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அப்பகுதிக்கு விரைந்து, சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த குண்டை செயலிழக்கச் செய்தனர். தன் மீதான வழக்கு விசாரணைக்காக நாளை முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். அதற்காக நீதிமன்றம் செல்லும் வழியில் போலீஸார் ஆய்வு நடத்திய போது இந்த வெடிப்பொருள்கள் கண்டறியப்பட்டன. கடந்த 24 ஆம் தேதி நீதிமன்றத்துக்கு முஷாரப் செல்லும் வழியில் வெடிப்பொருள்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.