பாகிஸ்தானின் மத்திய பகுதியில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பயணிகள் ரயிலான அவாம் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு பொருட்கள் கொண்டு வந்த ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து ரயில்வே அதிகாரி சைய்மா பஷீர் கூறும்போது, "பயணிகள் ரயில் ஓட்டுனரின் கவன குறைவால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின் ஓட்டுனர் சிவப்பு சிக்னலை சரியாக கவனிக்கவில்லை இதுவே விபத்துக்கு காரணம்" என்றார்.
எனினும் விபத்து ஏற்பட்டதற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை. விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடப்பட்ட மூன்று நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் திரும்புகையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 19 பேர் பலியாகினர்.