மாயமான மலேசிய விமான பைலட்டின் சிமுலேட்டரில் சில முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்குக்கு மார்ச் 8-ம் தேதி அதிகாலை 12.41 மணிக்கு 239 பேருடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 1.20 மணி அளவில் கட்டுப்பாட்டு அறைரேடாரில் இருந்து மறைந்தது.
அடுத்த நாள் காலை 8.11 மணிக்கு பிரிட்டனைச் சேர்ந்த தனியார் செயற்கைக் கோளில் விமானத்தின் சிக்னல் பதிவாகியுள்ளது. ஆனால் இடத்தை துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை. லாவோஸ் முதல் காஸ்பியன் கடல் வரையி லான வடக்குப் பகுதி அல்லது இந்தோனேசியா முதல் மேற்கு ஆஸ்திரேலியா வரையிலான தென் பகுதியில் விமானம் பறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மலேசிய விமானம் மாயமான மார்ச் 8-ம் தேதி இரவு 1.28 மணி அளவில் தாய்லாந்து ராணுவ ரேடாரில் மர்ம விமானம் பதிவாகியுள்ளது. சுமார் 6 நிமிடங்கள் மட்டுமே ரேடாரில் தெரிந்த அந்த விமானம் திடீரென மாயமாகிவிட்டது. மாயமான விமானத்தின் விமானி ஜகாரி அகமது ஷாவின் வீட்டில் இருந்து சில நாள்களுக்கு முன்பு விமான சிமுலேட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை, டியாகோ கார்சியா ஆகியவற்றின் 1000 மீட்டர் நீளம் கொண்ட விமான நிலைய ஓடுபாதைகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சிமுலேட்டரில் சில முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்த தகவல்களை மீண்டும் எடுக்க கணினி நிபுணர்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில்தான் அந்தத் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவை கிடைத்தால் வழக்கில் முக்கிய துப்பு கிடைக்கக்கூடும் என்று மலேசிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விமானி ஜகாரி அகமது ஷா மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமின் உறவினர் மற்றும் தீவிர ஆதரவாளர் ஆவார். அண்மையில் அன்வர் இப்ராகிமுக்கு 5 ஆண்டு கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு பழிவாங்கும் வகையில் விமானத்தை அவர் கடத்தினாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.