மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் இடைக்கால அதிபராக கேத்தரீன் சம்பா பான்சா தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாங்கி நகர மேயராக இருந்தவர்.
தேசிய பாராம்பரிய கவுன்சில் கூட்டத்தில் நடைபெற்ற இரண்டு கட்ட வாக்கெடுப்புக்குப் பின் அவர் புதிய தற்காலிக அதிபராக தேர்வு செய்யப்பட்டார். மத்திய ஆப்பிரிக்க குடியரசின் வரலாற்றில் பெண் ஒருவர் அதிபராகத் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.
அதிபர் பதவிக்கான வாக்கெடுப் பில் முன்னாள் அதிபரின் மகன் சாங்கா கோலிங்பாவை கேத்தரீன் சம்பா தோற்கடித்தார்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆயுதக் கிளர்ச்சியில் ஆட்சி கவிழ்க்கப் பட்டது. இப்போதும் உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது.
அந்நாட்டில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ போராளி குழுக்களுக்கு இடையே ஏற்பட்டு வரும் மோதலில் இதுவரை ஏராளமானோர் கொல் லப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ போராளிக் குழுவான ஆன்டி-பங்கா அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று கேத்தரீன் சம்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிபராக இருந்த பொசிசே கடந்த ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சி யால் பதவியை இழந்தார். இதையடுத்து கிளர்ச்சிக் குழு தலைவர் மிசெல் ஜொடோடியா அதிபரானார். நாட்டின் முதல் முஸ்லிம் தலைவரான அவருக்கு எதிராக கிறிஸ்தவ போராளிக் குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு அவரை கவிழ்த்தன. இதனால் அங்கு பெரும் வன்முறையும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.