உலகம்

தாய்லாந்தில் மர்ம நபர் சுட்டதில் அரசு எதிர்ப்பாளர் பலி : அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்

செய்திப்பிரிவு

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் சனிக்கிழமை அதிகாலை துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் இறந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து, பாங்காக் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எரவான் அவசர மருத்துவ சேவை மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பாங்காக்கில் உள்ள அரசு இல்லத்தின் 4-வது நுழைவு வாயில் அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் உடல் பகுதியில் குண்டு பாய்ந்த 30 வயதுடைய ஒருவர் இறந்தார்" என்றார்.

அரசு எதிர்ப்பாளர்கள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக் கோரி கடந்த அக்டோபர் மாத மத்தியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அரசு இல்லத்துக்கு வெளியே தங்கி உள்ள பலர் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீஸாருக்கும் ஆர்ப் பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

கடந்த வியாழக்கிழமை தாய்-ஜப்பானிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மற்றும் போலீஸார் உள்பட மொத்தம் 143 பேர் காயமடைந்தனர்.

இதுபோல, வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மோதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த அரசு எதிர்ப்பாளர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 3 நாட்களில் 3 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. - பி.டி.ஐ.

SCROLL FOR NEXT