அமெரிக்காவில் நடைபெறும் அமைச்சக அளவிலான முதல் சர்வதேச விண்வெளிக் கருத் தரங்கில் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞா னிகள் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சக அளவிலான கருத்தரங்கு என்ற போதும், இந்திய தரப்பில் அமைச்சக அளவிலான விஞ்ஞானிகளோ, மிக மூத்த விஞ்ஞானிகளோ இக்கருத்த ரங்கில் பங்கேற்கவில்லை.
அமெரிக்காவில் சர்வதேச விண்வெளிக் கருத்தரங்கு இரு நாள்கள் நடைபெறுகிறது. வியாழக்கிழமை தொடங்கிய இக்கருத்தரங்கில் சீனா, ஜெர்மனி, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 30 தலைசிறந்த விண்வெளி ஆய்வுமையங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அமைச்சக அளவிலான உயர் நிலைக் கருத்தரங்காக இது நடத் தப்படுகிறது.
இந்தியத் தரப்பில் விண்வெளி பயனீட்டு மைய (எஸ்ஏசி) துணை இயக்குநர் ஏ.எஸ்.கிரண் குமார் தலைமையில் விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சக அளவிலான விஞ் ஞானிகள் அல்லது இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் விஞ்ஞானிகள் பங்கேற்காதது குறித்து இந்தியத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.
அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத்தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தூதரக அளவி லான உரசல்களே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல் சர்வதேச விண்வெளி கருத்தரங்குக்கு இந்திய பங்கேற் பாளர்களுக்கும் அழைப்பு விடுத் தோம். விண்வெளித் துறையில் இந்தியாவும் அமெரிக்காவும் குறிப்பிடத்தக்க வகையில் இணைந்து செயல்படுகின்றன.
இந்திய விஞ்ஞானிகளுள் ஒருவர் சீன, ஸ்வீடன், அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் சர்வதேச வானியல் கழக பொதுச்செயலாளர் ஜீன் மைக்கேல் கன்டன்ட் உள்ளிட்டோருடன் வட்டமேஜை கருத்தரங்கில் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
சர்வதேச வானியல் கழகத்தின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வளர்ந்த நாடு
ஜெர்மனி விண்வெளி ஆய்வு மைய பேராசிரியர் ஜான் வோர்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா சுயமாக விண்வெளி ஏவுகணைகளை ஏவும் திறனைப் பெற்றுள்ள மிகச்சில நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இதைச் சாதித்த இந்தியாவைப் பாராட்டுகிறோம். விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்தையும் இந்தியா பெற்றிருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் விண்வெளித்துறையில் இந்தியா வளரும் நாடல்ல; வளர்ந்த நாடு.
இந்தியாவை விண்வெளித் துறையில் நாங்கள் (ஜெர்மனி) ஒரு கூட்டாளியாகப் பார்க்கிறோம். இளம் கூட்டாளியாகவோ, முதுநிலைக் கூட்டாளியாகவோ அல்ல. இந்தியா விண்வெளி தகவல் தொடர்பு என்ற நிலையைத் தாண்டி, நிலவு, செவ்வாய் என தனது களத்தை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது என்றார்.