அண்டார்க்டிகாவில் உறைபனியில் சிக்கியுள்ள ரஷியக் கப்பல் மற்றும் சீன மீட்புக் கப்பல் ஆகியவற்றை மீட்பதற்காக அமெரிக்க கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான போலார் ஸ்டார் பனி உடைப் புக் கப்பல் விரைந்துள்ளது.
எம்.வி. அகாடமிக் ஷோகல்ஸ்கி எனும் ரஷிய ஆராய்ச்சிக் கப்பல் 74 பயணிகளுடன் அண்டார்க்டிக் கடலில் உறைபனியில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சிக்கியது. அதனை மீட்கச் சென்ற சீன மீ்ட்புக் கப்பல் ஜியூ லாங்க் எனும் கப்பலும் உறைபனியில் சிக்கிக் கொண்டது. இரு கப்பல்களைச் சுற்றியும் சுமார் 12 அடி தடிமனுள்ள உறைபனி சூழ்ந்துள்ளது. இரு கப்பல்களும் உறைபனியில் இருந்து மீண்டு, இயல்பான நீர்ப்பகுதிக்கு வர 21 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும்.
இரு கப்பல்களும் நகர முடியாமல் உள்ள நிலையில், அவற்றை மீட்க அமெரிக்காவின் உதவியை ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு மற்றும் மீட்பு மையம் நாடியுள்ளது. ரஷியா மற்றும் சீனாவும் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க கடலோர பாதுகாப்புத் துறையின் பசிபிக் பிராந்திய துணை அட்மிரல் பால் எப் ஜுகுந் கூறுகையில், “ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை உடனடியாக செவிமடுத்துள்ளோம். கடலில் உயிருக்குப் பாதுகாப்பு என்பதே எங்களின் அதிகபட்ச முன்னுரிமையாக இருக்கும்” என்றார். 399 அடி நீளமுள்ள இக்கப்பல், 120 பேர் கொண்ட குழுவுடன் மீட்புப் பணியில் ஈடுபடவுள்ளது. சீனக்கப்பலில் 101 பேரும், ரஷியக் கப்பலில் 22 பேரும் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உடனடி ஆபத்து எதுவுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது