உலகம்

பாகிஸ்தான் நீதிமன்றம் முஷாரபுக்கு கைது வாரன்ட்

செய்திப்பிரிவு

நவாப் அக்பர் பக்டி கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு குவெட்டா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் உள்துறை அமைச்சர் அப்தாப் ஷெர்பாவ் மற்றும் முன்னாள் மாகாண உள் துறை அமைச்சர் மிர் ஷோயப் நவுஷெர்வானி ஆகியோர் ஆஜராகினர்.

ஆனால், முஷாரபை ஆஜர்படுத்த முடியவில்லை என குற்றப் பிரிவு அதிகாரிகள் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையடுத்து, முஷாரபை கைது செய்து நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்துமாறு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வழக்கை குவெட்டா நகரிலிருந்து வேறு நகருக்கு மாற்ற வேண்டும் என முஷாரப் தரப்பு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதற்கிடையே, முஷாரப் மீது பொய் வழக்குகள் போட்டு அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதாக முஷாரப் தலைமையிலான அனைத்து முஸ்லிம் லீக் கட்சியின் அரசியல் ஆலோசகர் சவுத்ரி சர்பிராஸ் அஞ்சும் கஹ்லான் குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ள முஷாரப், இப்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT