புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சோகம்
துருக்கியில் உள்ள ஒரு இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் 2 இந்தியர்கள் உட்பட 39 பேர் பலியாயினர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ரீனா இரவு விடுதியில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர், விடுதியின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு காவலர் உட்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பின்னர் விடுதிக்குள் நுழைந்த அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு இங்கும் அங்குமாக ஓடி உள்ளனர். இதனிடையே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 39 பேர் பலியாயினர். மேலும் காயமடைந்த 69 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தப்பி ஓடிய மர்ம நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தீவிரவாதிகளின் சதித் திட்டமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்தான்புல் இரவு விடுதியில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில், மாநிலங்களவை முன்னாள் எம்பியின் மகன் அபிஸ் ரிஸ்வி மற்றும் குஷி ஷா (குஜராத்) ஆகிய 2 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். இதையடுத்து, அங்குள்ள இந்திய தூதர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.