தங்களுக்கு உண்மையான ஜனநாயகம் வழங்க வேண்டும் என்று கோரி ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று பேரணி சென்றனர். பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த, உலகின் முக்கிய வர்த்தக நகரான ஹாங்காங், 1997ம் ஆண்டு சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஹாங்காங்குக்கு பகுதியளவில் சுயாட்சி வழங்கியது சீனா. மேலும் 2017ம் ஆண்டு முதல், ஹாங்காங் மக்கள் தேர்தல் மூலம் தங்கள் ஆட்சியாளரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என உறுதி அளித்தது.
சீனா தலையீடு
ஆனால் இந்த அரசியல் சீர்சிருத்தம் மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்படுவதாக ஹாங்காக் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தேர்தலில் போட்டியிடும் அனைவரையும் அனுமதிக்காமல், வேட்பு மனு தாக்கலின்போது, ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவோர் மற்றும் சீன எதிர்ப்பாளர்களை வடிகட்ட சீனா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
பேரணி
இந்நிலையில் புத்தாண்டு நாளான நேற்று ஹாங்காங்கில், தங்களுக்கு உண்மையான ஜனநாயகம் வழங்க கோரி, பல்லாயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர். பாகுபாடின்றி வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை, தங்கள் ஆட்சியா ளரை தேர்வு செய்வதில் அதிக சுதந்திரம் உள்ளிட்ட கோரிக்கை களை அவர்கள் வலியுறுத்தினர்.