பாகிஸ்தான் பெண் கல்வி உரிமைப் போராளி மலாலாவுக்கு 2013-ம் ஆண்டின் சர்வதேச சமத்துவம் மற்றும் பாகுபாடற்ற நிலைக்கான பரிசை மெக்ஸிகோ வழங்கவுள்ளது.
இந்த பரிசு தொடர்பான அறிவிப்பை மெக்ஸிகோவின் பாகுபாட்டுக்கு எதிரான தேசிய கவுன்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
கல்வியில் பாலினம், வயது, மத அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதை வலியுறுத்தியும், மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாகவும் மாலாலா ஆற்றிய சேவையை பாராட்டி, இந்த பரிசை வழங்கவுள்ளதாக மெக்ஸிகோ தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட மலாலா யூசஃப்ஜாயை 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றனர்.
லண்டனில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மலாலா உயிர் பிழைத்தார். தற்போது லண்டனில் வசித்து வரும் மலாலா, குழந்தைகள் உரிமைக்கான சர்வதேச தூதராக உள்ளார்.
கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் மலாலாவுக்கு மனித உரிமைக்கான சகாரோவ் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.