உலகம்

தினமும் உடற்பயிற்சி செய்தால் தசை காயம் தானாக குணமாகும்: புதிய ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

தினமும் உடற்பயிற்சி செய்தால் முதிர் வயதிலும் தசை காயங்கள் தானாகவே குணமாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் உட்பட பெரும்பாலான பாலூட்டி இனங்களில் வயதான பிறகு தசை வீக்கம், தசைப்பிடிப்பு உள்ளிட்ட காயங்கள் குணமாவதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது. சில நேரங்களில் காயம் முழுமையாக குணமடையாமல் வலியோடு வாழ வேண்டிய நிலைக்கு முதியவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில், வெறும் 8 வாரங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் முதிர் வயதிலும் தசை காயங்கள் தானாகவே குணமாகும் என்று கனடாவைச் சேர்ந்த மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக எலிகளை வைத்து விஞ்ஞானிகள் பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இதன்படி எலிகளை மூன்று குழுக்களாக பிரித்தனர். முதல் குழுவில் நன்றாக உடற்பயிற்சி செய்யும் முதிர் வயது எலிகள், இரண்டாவது குழுவில் உடற்பயிற்சி செய்யாத முதிர் வயது எலிகள், மூன்றாவது குழுவில் உடற்பயிற்சி செய்யாத இளம் வயது எலிகள் இடம்பெற்றன.

மிகச் சிறிதளவு பாம்பு விஷம் மூலம் இந்த எலிகளுக்கு தசைநார் காயங்கள் ஏற்படுத்தப்பட்டன. எட்டு வாரங்களுக்குப் பிறகு 3 குழுவில் இடம்பெற்ற எலிகளும் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் நன்றாக உடற்பயிற்சி செய்யும் முதிர் வயது எலிகளின் தசைநார் காயங்கள் தானாகவே குணமடைந்து ஆரோக்கியமாக காணப்பட்டன.

உடற்பயிற்சி செய்யாத முதிர்வயது எலிகளும் இளம் வயது எலிகளும் காயம் ஆறாமல் வலியுடன் அவதிப்பட்டன.

இதுகுறித்து மெக்மாஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானி கயானி பார்ஸி கூறிய தாவது: தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் முதிர் வயதிலும் தசைநார் காயங்கள் தானாகவே குணமாகும். எலிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனைக ளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT