இந்தியாவில் பதினைந்து பேரின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த தீர்ப்பு மிக முக்கிய நடவடிக்கை என ஐநா மனித உரிமைகள் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மனித உரிமைகளுக்கு முக்கி யத்துவமும் மனித உயிருக்கு மதிப்பும் தரப்படுவது அவசியம் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். அதன்படி அதில் தமக்குள்ள உறுதிப்பாட்டை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நிலை நாட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் ஐநா மனித உரிமைகள் வல்லுநர் கிறிஸ்டாப் ஹெய்ன்ஸ். தூக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டிய நிலை இருப்பதாக கருதினால், அதற்கென உள்ள சர்வதேச சட்ட நடைமுறைகளை பின்பற்றி நீதிநெறி தவறாத விசாரணைக்கு உள்படுத்த வேண்டும்.
மனநோயால் துன்புறும் நபர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கூடாது என்கிற சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு மன நிறைவைத் தருகிறது என்றார் ஹெய்ன்ஸ். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மற்றொரு ஐநா மனித உரிமை வல்லுநரான ஜுவான் இ. மென்டஸ் என்பவரும் வரவேற்றுள்ளார்.
சித்திரவதைக்கும் கொடுமைப் படுத்துதலுக்கும் எதிரான தடையை மீறுவதாக மரண தண்டனை அமையாதவாறு உறுதி செய்வது இந்திய நீதிமன்றங்களின் கடமை என்றார் மென்டஸ்.
கருணை மனுக்கள் மீது முடிவு செய்வதில் நீண்ட தாமதம் ஏற்பட்டால் மரண தண்டனையை ஆயுளாக குறைக்கலாம் என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், வீரப்பன் கூட்டாளிகள் உள்ளிட்ட 15 கைதிகளின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து ஜனவரி 21ம் தேதி தீர்ப்பளித்தது. மன நோயால் அவதிப்பட்டு வரும் மேலும் 2 பேரின் மரண தண்டனையையும் குறைத்தது.