இந்தியர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் ‘ஆன்லைன் விசிட்டர் விசா’ வசதி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதனால் இந்தியர்களின் ஆஸ்திரேலிய பயணம் எளிதாகும் என நம்பப்படுகிறது.
2017-ம் ஆண்டில் முதல் 4 மாதங்களில் மட்டும் இந்தியர்களுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசிட்டர் விசாக்களை ஆஸ்திரேலிய குடியேற்றம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (டிஐபிபீ) வழங்கியுள்ளது.
இந்தியர்களிடையே சிறந்த சுற்றுலாத் தலமாக ஆஸ்திரேலியா பிரபலம் அடைந்து வருவதால், இந்தியாவில் ஆஸ்திரேலிய விசாக் களுக்கான தேவை அதிகரித் துள்ளதாக டிஐபிபீ கருதுகிறது.
டிஐபிபீ உதவி அமைச்சர் அலெக்ஸ் ஹாக் கூறும்போது, “ஆஸ்திரேலியா வரவிரும்பும் இந்தியர்கள் விரைவில் மிகவும் சவுகர்யமான முறையில் விண்ணப்பிக்கலாம். சுற்றுலா, வர்த்தகம் தொடர்பாகவும் நண்பர் கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க வருவோருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
விசிட்டர் விசா பெறுவதில் மிகவும் தாமதம் ஏற்படுவதாக ஆஸ்திரேலியா வரவிரும்பும் இந்தியர்கள் தரப்பில் நூற்றுக் கணக்கில் புகார்கள் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசிட்டர் விசா கேட்டு ஆன் லைனில் விண்ணப்பிக்கும்போது, விண்ணப்ப கட்டணத்தை நெட் பேங்கிங் மூலம் செலுத்தும் வசதி, அவ்வப்போது தங்கள் விண்ணப்பத்தின் நிலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை விண்ணப்ப தாரர் பெற முடியும்.