கலர் கலராக முகமூடி அணிந்துகொண்டு, திடீர் திடீரென நினைக்குமிடத்தில் மைக்கைப் பிடித்துக்கொண்டு கருத்துப் பாடல் பாடி மக்கள் கவனத்தை ஈர்ப்பது Pussy Riot என்கிற ரஷ்யப் பெண்கள் இசைக்குழுவினரின் வழக்கம்.
இந்த கோஷ்டி ஆகஸ்டு 2011ல்தான் தொடங்கப்பட்டது. அடுத்த வருஷமே இந்தப் பூனைப் புரட்சியாளர்கள் உலக அளவில் பிரபலமாகிப் போனார்கள். காரணம் இவர்கள் மாஸ்கோ நகரத்தின் முக்கிய தேவாலயம் ஒன்றில் நுழைந்து சுமார் நாற்பது வினாடிகளுக்கு ஒரு பாட்டுப் பாடினார்கள். இயேசுநாதரைப் போற்றிப் பாடியிருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்கப் போவதில்லை. விளாதிமிர் புதினைத் திட்டியல்லவா பாடி விட்டார்கள்?
அது நடந்தது பிப்ரவரி 21, 2012 அன்று. தேவாலய நிர்வாகத்தினர் ரொம்ப தர்ம சங்கடமாகிப் போனார்கள். அம்மா தாயே என்று கெஞ்சிக் கூத்தாடி இந்தப் பாட்டுப் பறவைகளைத் தடுத்து நிறுத்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் விஷயம் பரவிவிட்டது. புரட்சிகளையெல்லாம் சந்தித்த தேசத்தின் அதிபருக்கு இந்தப் பூனைப் பாடகி களின் சங்கீதத்தைச் சகிக்க முடியவில்லை.
எனவே மார்ச் 3ம் தேதி மேற்படிக் குழுவின் மூன்று உறுப்பினர்களைக் கைது செய்துவிட்டது ரஷ்ய போலிஸ். இருபத்தி யோறாம் நூற்றாண்டே என்றாலும் கைது செய்த மறுகணம் சைபீரியாவுக்குக் கடத்துவது தான் அங்கத்திய கலாசாரம். அவ்வண்ணமே Nadezhda Tolokonnikova, Maria Alyokhina, Ekaterina Samoutsevitch என்கிற அந்த மூன்று பெண் பூனைக் குட்டிகளையும் (இந்தப் பெயரையெல்லாம் எதற்குத் தமிழில் படுத்த வேண்டும்?) சைபீரிய சிறைச்சாலைக்கு அனுப்பிவிட்டார்கள். இரண்டு வருஷ ஜெயில் என்பது தண்டனை.
வாழ்க ஜனநாயகம். ஒரு பாட்டைப் பொறுத் துக்கொள்ளக்கூடவா புதினால் முடியாது? என்ன ஒரு சகிப்புத்தன்மை? சந்தேகமில்லை. ஸ்டாலினின் ஆவி புதினுக்குள் புகுந்துவிட்டது. உலகெங்கும் கண்டனக் கணைகள். கடும் விமரிசனங்கள்.
சக சங்கீத சாம்ராட்டான மடோனா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'வெறும் நாற்பது செகண்டு சங்கீதத்துக்கு ரெண்டு வருஷ தண்டனை என்பது அநியாயம்' என்று எழுதினார். ஒரு மணிநேரக் கச்சேரி என்றால் பரவாயில்லையா என்று கேட்கப் படாது. உண்மையில் மடோனாவின் எதிர்ப்பு உள்ளார்ந்த வருத்தம் தோய்ந்த குரலில்தான் வெளிப்பட்டது. மேற்படி பூனைப் புரட்சியாளர்களுக்கோ, விளாதிமிர் புதினுக்கோ ஃபேஸ்புக்கில் பக்கங்கள் இல்லை என்றபோதும் மடோனாவின் கண்ட னத்தைச் சுமார் ஒரு லட்சம் பேரின் லைக்குகள் இரு தரப்புக்கும் அன்று கொண்டு சேர்த்தன. இவர்களை விடுவிப்பதற்கு வழக்காடும் செலவுக்காக லட்சக்கணக்கில் பணம் சேர்ந்தது.
யார் கண்டித்து என்ன? கொடுத்த தண்டனை கொடுத்ததுதான் என்று சொல்லிவிட்டது நீதிமன்றம். ஒரு அதிபரை, அதுவும் உலகின் அதி சக்தி வாய்ந்த தலைவர் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை வருணித்த பெருந்தலைவரை அதெப்படி இந்தச் சின்னப் பெண்கள் நக்கலடித்துப் பாடலாம்? அதுவும் ஒரு தேவாலயத்தில் பொதுமக்கள் முன்னிலையில்? குற்றம், பெருங்குற்றம்.
பாடிப் பெறாத புகழை இந்த ஒரு சம்பவத்தில் அள்ளிக்கொண்டு போனார்கள் அந்தப் பாடகிகள்.
பூமி ஒரு முறை சுற்றி மீண்டது. விளாதிமிர் புதினும் மனசு மாறுவார். சர்வதேச அளவில் அவர் கவனம் ஈர்க்கும் பல காரியங்களைச் செய்துகொண்டிருக்கும் தருணம் இது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒரு மாதிரி வரையறுக்கப்பட்ட நல்லுறவு முயற்சிகளில் அவர் தீவிரமாக இருக்கும் சமயத்தில் இந்தப் பூனைக்குட்டிகளை இப்போது வெளியே விட்டுவிடுவது நல்லது என்று யாரோ தர்மாத்மா எடுத்து சொல்லியிருக்கக் கூடும்.
கைது செய்து சைபீரியாவுக்கு அனுப்பிய மேற்படி இசைக்குழுவின் மூன்று இனிய பாட்டுக் குயில்களை நீதிமன்றம் இப்போது விடுவித்திருக்கிறது. போய்ப் பிழைப்பைப் பாருங்கள் அம்மணிகளா. சமர்த்தாக இருங்கள். புதின் எதிர்பார்த்தது உலகளாவிய வரவேற்பு. ஆனால் நடந்திருப்பது வேறு. அவரது அரசியல் ஸ்டண்ட் என்று மட்டுமே இந்த விடுதலை நடவடிக்கை வருணிக்கப்படுகிறது. கைது செய்தபோது வந்த கண்டனங்களைவிட, காலம் தாழ்த்திச் செய்த விடுதலை அளித்திருக்கும் கெட்ட பேர் பெரிது.
என்ன செய்யலாம்? வேண்டுமானால் க்ரெம்ளின் மாளிகையில் புஸ்ஸி ரயட்டர்ஸின் கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்து பார்க்கலாம். டிசம்பர் கச்சேரிகளுக்கு எப்போதுமே மவுசு ஜாஸ்தி.