உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும்வகையில் செயல்பட்டது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அல் ஜஸீரா தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.
அல் ஜஸீரா தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர் பீட்டர் கிரெஸ்டே, செய்திப் பிரிவின் தலைவர் முகமது பாஹ்மி மற்றும் செய்தி தயாரிப்பாளர், கேமராமேன் ஆகியோர் எகிப்து அரசால் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். கத்தாரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல் ஜஸீரா ஆங்கில செய்தி சேனலுக்கு எகிப்தின் கெய்ரோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்து, உரிய அனுமதி பெறாமல் செய்திகளை அனுப்பியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதோடு, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வந்ததாகவும், தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட பிரசுரங்களை அவர்கள் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு ஆதரவாகவும், அந்த அமைப்பின் முக்கிய தலைவரும், முன்னாள் அதிபருமான முகமது மோர்ஸிக்கு ஆதரவாகவும் அல் ஜஸீரா செயல்பட்டு வருவதாக எகிப்து அரசு நீண்டகாலமாக குறை கூறி வந்தது. இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் விளக்கம்
அல் ஜஸீராவின் செய்தியாளர்கள் கைது குறித்து உள்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “இது, தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான். ஓட்டல் அறையை செய்தி மையமாக அந்த நிருபர்கள் பயன்படுத்தியுள்ளனர். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் அந்த ஓட்டல் அறையில் சந்தித்துக் கூட்டம் நடத்துவதற்கு அவர்கள் உதவி புரிந்துள்ளனர்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள செய்தியாளர்களிடம் எகிப்து பாதுகாப்புப் பிரிவு அரசு வழக்கறிஞர்கள் செவ்வாய்க் கிழமை விசாரணை நடத்தினர்.