ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தரமில்லா உறுப்பினர் பதவிக் காலம் முடிவுற்று ஓராண்டு முடிவதற்குள் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான் போட்டியிலிருந்து விலகியதால், அந்நாட்டுக்கு பதிலாக இந்தியா போட்டியிடுகிறது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜி கூறுகையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 2021, 2022ம் ஆண்டுகளுக்கான நிரந்தரமில்லா உறுப்பினர் பதவிக்கு இந்தியா போட்டியிட உள்ளது. இதற்கான தேர்தல் அக்டோபர் 2020ம் ஆண்டு நடைபெறும்.
2011, 2012ம் ஆண்டுக்கான நிரந்தரமில்லா உறுப்பினர் பதவியை ஆப்கானிஸ்தான் எதிர்பார்த்திருந்தது. ஆனால் இந்தியா மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு போட்டியிலிருந்து விலக ஆப்கானிஸ்தான் முடிவு செய்துள்ளது” என்றார்.
இம்முடிவை ஐ.நா.வில் உள்ள பிற நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளிடம் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தெரிவித்துள்ளன. நவம்பர் 21ம் தேதியிட்ட அக் கடிதத்தில் உறுப்பு நாடுகளின் ஆதரவையும் அவை கோரியுள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பினர்களை கொண்டது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய. 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்க ளாகவும், 10 நிரந்தரமில்லா உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிரந்தரமில்லா உறுப்பினர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிராந்திய அடிப்படையில் ஐ.நா. பொதுச் சபையால் தேர்வு செய்யப்படுகின்றனர்.