அண்மையில் காலமான, அமெரிக்காவின் புகழ்பெற்ற நாட்டுப்புற இசைக்கலைஞர் பீட் சீகருக்கு அவரது நண்பர்கள், ரசிகர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவர் இயற்றிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.
நவீன அமெரிக்க நாட்டுப்புற இசை இயக்கம் உருவாக தூண்டு கோலாக விளங்கிய பீட் சீகர், உலகம் முழுவதும் பிரபலமான காலத்தால் அழியாத பல்வேறு பாடல்களை இயற்றி, பாடியவர்.
பாடகர், பாடலாசிரியர், சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் செயல் பாட்டாளர், முற்போக்கு அரசியல் போராட்டங்களில் பங்கேற்றவர் என பன்முக ஆற்றல் மற்றும் செயல்பாடுகள் கொண்ட பீட் சீகர் கடந்த ஜனவரி 27ம் தேதி தனது 94வது வயதில் காலமானார். நியூயார்க் அருகில், பீகான் நகரில் உள்ள லிப்பி இறுதிச்சடங்கு இல்லத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் லிப்பி இறுதிச் சடங்கு இல்லத்தில் திங்கள்கிழமை அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீகரின் பேத்தி பிளாசம் சீகர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதில் சீகரின் சாம்பல் கலசத்துடன், அவரது புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய சில பொருள்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. சீகரின் நண்பர்கள், ரசிகர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லிப்பி இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அலங்கரிக்கப்பட்ட அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்த இவர்கள், சீகர் ஆரம்ப காலத்தில் இயற்றிய புகழ்பெற்ற பாடலைப் பாடி இசையஞ்சலி செலுத்தினர்.
சீகர் தனது மனைவி டோஷியுடன் பீகான் நகரில்தான் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வந்தார். டோஷி கடந்த ஜூலை மாதம் இயற்கை எய்தினார்.