உலகம்

ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுப்பிடிப்பிற்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

செய்திப்பிரிவு

ஹிக்ஸ் போஸான் துகளை கண்டறிந்த பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் (84), பெல்ஜியத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரான்காய்ஸ் எங்க்லெர்ட் (80) ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அணுவில் இந்தத் துகள் இருப்பதை இருவரும் கடந்த 1964-ம் ஆண்டு கோட்பாட்டு ரீதியில் கண்டறிந்தனர். இது தொடர்பாக இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா அருகே உள்ள செர்ன் ஆய்வுக் கூடத்தில், அணுவில் உள்ள புரோடான்களை ஒன்றுடன் ஒன்று அதிவேகமாக மோதச் செய்தபோது, போஸான் துகள் (கடவுள் துகள் என்றும் சிலர் இதற்கு பெயரிட்டுள்ளனர்) வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். நோபல் பரிசு தேர்வுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அணுத் துகள்கள் எவ்வாறு நிறையை (எடையை) பெறுகின்றன என்பதை புரிந்துகொள்வதற்கு கோட்பாட்டு ரீதியிலான இவர்களின் ஆய்வு உதவியுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத புலத்திலிருந்து (களம்) தோன்றும் போஸான் துகள், எங்கும் நிறைந்துள்ளது. பிரபஞ்சமே காலியாக இருப்பது போன்று தோன்றினாலும், இந்த (துகள்களால் ஆன) வெளி உள்ளது. அந்த புலத்துடன் உள்ள தொடர்பு மூலம்தான் அணுக்களில் உள்ள துகள்கள் அனைத்தும் நிறையை (எடையை) பெறுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT