உலகம்

ஜப்பான் எரிமலைச் சீற்றம்: பலி 46 ஆக அதிகரிப்பு

ராய்ட்டர்ஸ்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள மவுன்ட் ஆன்டேகே எரிமலை வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

சம்பவ பகுதிக்கு ராணுவம் விரைந்து சாம்பலுக்குள் புதைந்துள்ள உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுவருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவில் உள்ள மவுன்ட் ஆன்டேகே எரிமலை கடந்த மாதம் 27-ஆம் தேதி திடீரென வெடித்து சிதறி அபாயகரமான அளவில் சீற்றத்துடன் அணல் குழம்பை கக்கியது.

எரிமலை வெடித்துச் சிதறியதில் வெளியே வெடித்து சிதறிய பாறைகள் சுமார் 5 கீ.மீ. தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டன. இதனை அடுத்து எரிமலையை ஹெலிகாப்டர் மூலம் கண்காணித்த அதிகாரிகள் சீற்றத்தின் காரணமாக இரண்டு நாட்களுக்கு மீட்பு பணி மேற்கொள்வதில் சாத்தியமில்லை என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக ராணுவத்தினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளில் 46 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எரிமலையை சுற்றிலும் சுமார் 200 கி.மீ அளவுக்கு எரிக்குழம்பு பரவி அடர்த்தியான சாம்பல் போர்வை போர்த்தியது போன்ற தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. இதுவரை 40-க்கும் அதிமானோர் காணாமல் போனதாக புகார்கள் அந்த பகுதி அதிகாரிகளுக்கு வந்துள்ளன.

எரிமலை சீற்றத்துக்கு பல மலை ஏறும் சாகச வீரர்கள், சுற்றுலா பயணிகள் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எரிமலை பகுதியின் அடிவாரத்தில் உள்ள கிராம பகுதிகள் முழுவதும் சாம்பலால் சூழப்பட்டுள்ளது.

இதனிடையே சம்பவத்துக்கு பின்னர் தொடர்ந்து எரிக்குழம்பு வெளியேறுவதால் மீட்பு பணிகள் அடுத்த கட்டத்தை நெருங்கவே இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை குறித்த தகவலை ஜப்பான் அரசு உறுதிப்படுத்தாமல் உள்ளது. இந்த நிலையில் எரிமலை அருகே உள்ள நகனோ என்ற கிராமத்தில் சிலர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானதாக தெரிகிறது. சுமார் 80 கி.மீ. காற்றில் அமில வாயு கலந்து மாசு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

கிராமங்களில் இறந்தவர்கள் பற்றிய தகவலை ஜப்பான் அரசு உறுதி செய்யவில்லை. அந்த நாட்டின் நடைமுறைப்படி, பிரேத பரிசோதனை செய்து முடியாமல் அதுபற்றிய தகவல் வெளியிடப்படுவதில்லை.

மவுன்ட் ஆன்டேகே ஜப்பானின் 2–வது மிக பெரிய எரிமலை ஆகும். இதன் உயரம் 3067 மீட்டர் ஆகும். முன்னதாக 1979-ஆம் ஆண்டு இந்த எரிமலை மிக பெரிய அளவில் சீற்றத்தை வெடித்து சிதறி ஏற்பட்டது. இதன் பிறகு சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வெடித்து மவுன்ட் ஆன்டேகே எரிமலை ஜப்பானில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT