தீவிரவாதிகள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் வழக்கு விசாரணையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பின் வழக்கறிஞர்கள் கோரி உள்ளனர். அத்துடன் மருத்துவ சிகிச்சைக்காக முஷாரபை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப் கடந்த 2007-ம் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்ததுடன் ராணுவத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதுதொடர்பாக அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து முஷாரப் வழக்கறிஞர் களுள் ஒருவரான அகமது ராசா கசுரி புதன்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
முஷாரப் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் கடந்த திங்கள் கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் இறந்தனர். மேலும் தீவிரவாதிகள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இங்கு வழக்கு விசாரணையை எங்களால் எதிர்கொள்ள முடியாது. பாதுகாப்பு கருதி வேறு இடத்தில் விசாரணையை நடத்த வேண் டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பினரால் கையால் எழுதப் பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த மிரட்டல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
முஷாரப் மத நம்பிக்கை இல்லாதவர். அவர் பல கோடி டாலர்களை சம்பாதித்து உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக உள்ளார். அவர் ஏன் பாகிஸ் தானுக்கு திரும்பி வந்தார். அவரை தூக்கிலிட வேண்டும். எனவே, முஷாரப் மீதான வழக்கில் அவருக்கு ஆதரவாக வாதாடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு உங்கள் மூவரையும் (வழக்கறிஞர்கள்) கேட்டுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகளையும் உங்களையும் கொன்று விடுவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் தெற்கு மற்றும் வடக்கு வசிரிஸ்தான் மக்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அதன் நம்பகத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், போர்க்காலங்களில் கூட நீதி மன்றம் செயல்படும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் அக்ரம் ஷேக் தெரிவித்தார்.
வெளிநாடு செல்ல அனுமதி?
தீராத நோயால் பாதிக்கப் பட்டுள்ள முஷாரப் மருத்துவ சிகிச்சைக்காக வெளி நாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், துபாயில் வசித்துவரும் முஷாரபின் 94 வயது தாயாரை அருகிலிருந்து கவனிக்க வேண்யுள்ளது என்றும் கேட்டுக் கொண்டனர்.
முஷாரப் வழக்கறிஞர்களின் இது போன்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித் துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிபதி பைசல் அராப் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு வழக்கறிஞர் களின் கோரிக்கை குறித்து எவ்வித பதிலும் கூறவில்லை. இந்நிலையில் வழக்கின் அடுத்த விசாரணையை வெள்ளிக் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.