உலகம்

சீன ரயில் நிலைய கத்தி தாக்குதல்: 33 பேர் பலி; காயம் 130

செய்திப்பிரிவு

சீனாவின் தென்கிழக்கில் உள்ள குன்மிங் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் அடையாளம் தெரியாத கும்பல், மக்கள் மீது கத்திகளால் சரமாரியாக தாக்குதல் நடத்தியல் 33 பேர் பலியாகினர். பயங்கரவாத வன்முறைத் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குன்மிங் ரயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி, இரவு 9 மணியளவில் சுமார் 10 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் கத்திகளைக் கொண்டு மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியவர்களில் சந்தேகத்துக்குரிய 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிலரைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலானோர் கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். தாக்குதலுக்கு ஆளான மக்கள் ரத்த வெள்ளத்தில் அங்குமிங்கு அலறியடித்து ஓடியதாக சீன செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

"இது முன்கூட்டியே திட்டமிட்ட பயங்கரவாத வன்முறைத் தாக்குதல்" என்று சீன அரசின் செய்தி நிறுவனமான ஸின்ஹுவா-வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 33 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த 130-க்கும் மெற்பட்டோருக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீன ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட இந்தக் கத்தித் தாக்குதலுக்கு யாரும் இன்னும் பொறுப்பேற்காத நிலையில், இதன் பின்னணியில் பிரிவினைவாதிகள் இருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

SCROLL FOR NEXT