உலகம்

பாக். சிறையிலிருந்து இந்திய மீனவர்கள் 218 பேர் விடுதலை

முபாஷிர் சைதி

இந்திய மீனவர்கள் 218 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் 218 பேர் எல்லை தாண்டி கடலில் மீன் பிடித்ததாக பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு கடந்த 12 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைகளால் இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நல்லெண்ண நடவடிக்கைக்கான அறிகுறியாக இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சகம் விடுவித்து வருகிறது.

கடந்த டிசம்பர் 25ஆம் தேதி 220 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) 218 பேரை பாகிஸ்தான் விடுவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் மூத்த அதிகாரிகள் கூறியிருப்பதாவது, "நல்லெண்ண நடவடிக்கைக்கான அறிகுறியாக இரண்டாம் கட்டமாக 212 இந்திய மீனவர்களை விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியா, பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வரும் பிப்ரவரி-மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் தேர்தல் மூலம் இந்தியா, பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.

முன்னதாக இந்திய மீனவர்களின் விடுதலை ஜினா பாக்வான் என்ற மீனவரின் திடீர் மரணத்தால் தடைப்பட்டது. கடந்த புதன்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்த ஜினா பாக்வான்னின் பிரேத பரிசோதனை இந்திய தூதரக அதிகாரிகளின் முன்னிலையில் நடந்தது. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜினா பாக்வானின் உடல் வெள்ளியன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT