‘நியூயார்க்கில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில், 135 நாடுகள் பங்கேற்பது, குறிப்பிடத்தக்க சாதனை’ என, ஐநாவுக்கான இந்திய தூதர் சையது அக்பருதின் கூறினார்.
இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் இந்திய தூதரகம் மற்றும் ஐநா அமைப்பின் சார்பில் சிறப்பு யோகா தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐநாவுக்கான இந்திய தூதர் சையது அக்பருதின் கூறுகையில், ‘‘அனைத்தும் திட்டமிட்ட படி நடைபெற்றால், சர்வதேச யோகா தின விழாவில் 135 நாடுகள் பங்கேற்றது சாதனையாக கருதப்படும். இதுவரை 106 நாடுகள் பங்கேற்ற நிகழ்ச்சியே சாதனையாக இருந்துவருகிறது. இன்றைய யோகா விழா, சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
கடந்த, 2014-ல் நியூயார்க்கில் இருந்தே, பிரதமர் மோடி, யோகா தினத்தை முதல்முறையாக அறிவித்தார். எனவே, நியூயார்க்கில் மிக சிறப்பாக விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் உலகின் மிக மூத்த, 97 வயது யோகா பயிற்சியாளர் தாவோ போர்ச்சான் போன்றவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். யோகா மூலம் நீடித்த நிலையான உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சமூக அமைதி மற்றும் நல்லிணக் கத்தை ஏற்படுத்துவது குறித்தும் அவர்கள் பயிற்சி வழங்குவார்கள் என, அக்பருதின் குறிப்பிட்டார்.