உலகம்

மேற்கு ஆப்பிரிக்காவில் 7000 பேருக்கு எபோலா பாதிப்பு: ஐ.நா.

ஐஏஎன்எஸ்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் 7,178 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி அபாயகரமான நிலைமையை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பரவிய எபோலா தொற்று நோய், பின்னர் கினியா, சியேரா லியோன், லைபீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் வெகமாக பரவி, கடுமையான பாதிப்பை அந்த நாடுகளுக்கு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நோய் பாதிப்பு குறித்த சமீபத்திய ஆய்வறிக்கையை ஐ.நா. சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் எபோலா நோய்க்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 7,178 ஆக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இதுவரை 3,338 இறந்துள்ளனர். லைபீரியாவில் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலை இப்போது சியேரா லியோனில் ஏற்பட்டுள்ளது. கினியாவின் நிலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்கிறது. இங்கு புதிதாக எந்த நோயாளிகளும் கண்டறியப்படவில்லை.

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பலன் அளிக்காமல் உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த எண்ணிக்கையில் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்த 375 மருத்துவ அதிகாரிகளும் அடங்குவர். அதில் 211 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர் என்பது மிகவும் வருத்தத்துடன் கூற வேண்டியதாகும். இவர்கள் கினியா, லைபீரியா, நைஜீரியா, சியேரா லியோன் என பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள்" என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த புதன்கிழமை, லைபீரியாவிலிருந்து அமெரிக்கா சென்ற தாமஸ் எரிக் என்பவருக்கு எபோலா நோய் தொற்று இருப்பது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளான முதல் அமெரிக்க நபர் இவர் ஆவார்.

இதனை அடுத்து தாமஸ் எரிக்குக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய அவரது சொந்த ஊரான டெக்சாஸில் சுமார் 80 பேருக்கு எபோலா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT