காத்மாண்டு: நேபாளத்தின் ரோல்பா பகுதியில் 800 மீட்டர் ஆழ பள்ளத்தில் வேன் கவிழ்ந்து நேற்று ஏற்பட்ட விபத்தில் 20 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேபாளத்தின் இமய மலையில் சுமார் 4,580 மீட்டர் உயரத்தில் ரோல்பா நகர் அமைந்துள்ளது. அங்குள்ள புகழ்பெற்ற இந்து கோயிலில் வழிபடுவதற்காக ரூகம்கோட் பகுதியில் இருந்து சுமார் 20 பக்தர்கள் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் வேன், தவாங் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து 800 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 20 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் தபா கூறும்போது, “முதல்கட்ட விசாரணையில் சிறிய வேனில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்திருக்கிறது. உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை" என்றார்.