கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், தொடக்கப் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு உகாண்டாவின் கப்சோர்வா மாவட்டத்தில் உள்ள சிபி அருவிக்கு கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, நேற்று (ஜூலை 16) இரவு இந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதாக உகாண்டா காவல் துறை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மூன்று நபர்கள் மற்றும் பல குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்தப் பேருந்து உகாண்டா தலைநகர் கம்பாலாவில் அமைந்துள்ள கிங் டேவிட் ஜூனியர் ஸ்கூல் என்ற தொடக்கப் பள்ளிக்குச் சொந்தமானது என்றும் காவல் துறை தெரிவித்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையிலிருந்து விலகிச் சென்று, பாறையின் மீது மோதி கவிழ்ந்ததாக காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்டத் தகவல் என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.