உலகம்

உலக மசாலா: மஞ்சள் அன்னாசி vs இளஞ்சிவப்பு அன்னாசி

செய்திப்பிரிவு

லகின் மிகப் பெரிய பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளர்கள் டெல் மான்ட்டே நிறுவனத்தினர். காய்கறி, பழங்களிலிருந்து பானங்கள், நொறுக்குத் தீனிகள், இனிப்புகள் போன்றவற்றைச் செய்து உலகம் முழுவதும் அனுப்புகிறார்கள். கடந்த பத்து வருடங்களாக மரபணு மாற்றத்தின் மூலம் இளஞ்சிவப்பு அன்னாசிப் பழத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, கடந்த ஆண்டு வெற்றியும் பெற்றுவிட்டனர். நிறம் மாற்றப்பட்ட அன்னாசிப் பழத்தைச் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்று சர்ச்சைகள் எழுந்தன. உணவு மற்றும் மருந்து நிறுவனம், அமெரிக்கா முழுவதும் இளஞ்சிவப்பு அன்னாசி விற்பனைக்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கிவிட்டது. பழங்களில் மஞ்சள் வண்ணத்தைக் கொடுப்பது பீட்டா கரோட்டின். சிவப்பு நிறத்தைக் கொடுப்பது லைகோபீன். ’தக்காளி, தர்பூசணி போன்றவற்றில் இருக்கும் லைகோபீன் சிவப்பு நிறமிதான் இளஞ்சிவப்பு அன்னாசிப் பழத்திலும் இருக்கிறது. அதனால் சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை, பாதுகாப்பானது’ என்றும் கூறிவிட்டது. ஆனாலும் மக்கள் மனதில் இருந்த ஐயத்தைப் போக்கும் விதத்தில் கடந்த 6 மாதங்களாக இளஞ்சிவப்பு அன்னாசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விதவிதமாகப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. மக்கள் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். வழக்கமான அன்னாசிப் பழத்தைவிட இளஞ்சிவப்பு அன்னாசிப் பழத்தில் இனிப்பும் சாறும் அதிகமாக இருக்கின்றன. தற்போது அமெரிக்கா முழுவதும் விற்பனைக்கு வந்துவிட்டன.

மஞ்சள் அன்னாசி vs இளஞ்சிவப்பு அன்னாசி

திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் உலகம் முழுவதும் பரவிவிட்டது. இவர்களுக்காகவே ஸ்பெயின் நிறுவனம் ஒன்று, கண்ணாடித் துண்டுகள் மீது வெறும் கால்களில் நடக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது. திருமணச் சடங்குகளில் ஒன்றாக ஸ்பெயினின் சில பகுதிகளில் கண்ணாடித் துண்டுகள் மீது நடக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவது உண்டு. அதை இந்த நிறுவனம் தொழிலாக மாற்றிவிட்டது. “கிறிஸ்டல் ஆஃப் லவ் என்று இந்த நிகழ்ச்சியை அழைக்கிறோம். மணமகளும் மணமகனும் அலங்காரம் செய்துகொண்டு, ஒருவரை ஒருவர் பார்த்தபடி கண்ணாடித் துண்டுகள் மீது நடந்து வரவேண்டும். கண்ணாடி பாதத்தைப் பதம் பார்க்காமல் கவனமாக நடப்பதற்கு அருகில் ஒருவர் கையைப் பிடித்துக்கொள்வார். வாழ்க்கை என்பது கரடுமுரடானது. இருவரும் சேர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் அறிவுபூர்வமாகக் கையாண்டு, ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ்ந்தால் எந்தத் துன்பமும் வராது. கவனமில்லாமல் சென்றால் கண்ணாடித் துண்டுகள் காலைப் பதம் பார்ப்பது போல வாழ்க்கையும் பதம் பார்த்துவிடும் என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி எடுத்துரைக்கிறது. இன்றைய இளம் ஜோடிகள் துணிச்சலோடும் ஆர்வத்தோடும் இந்தச் சடங்கை மேற்கொள்கின்றனர். தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த நிகழ்ச்சி மறக்காது என்றும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் அதிகரிக்கிறது என்றும் கூறுகிறார்கள்” என்கிறார் நிறுவனத்தின் உரிமையாளர்.

திருமணத்தன்றே ரிஸ்க் எடுக்கிறார்களே இந்த ஜோடிகள்!

SCROLL FOR NEXT