உலகம்

பின்லேடனுக்கு அடுத்த தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி கராச்சியில் பதுங்கியிருப்பதாக அமெரிக்க ஊடகம் தகவல்

ஏஎஃப்பி

பின்லேடனுக்கு அடுத்த தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி பாகிஸ்தான், கராச்சி நகரில் ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் இருந்து வருவதாக அமெரிக்க ஊடகம் ஒன்றின் செய்தி அறிக்கை கூறுகிறது.

இது குறித்து அமெரிக்க ஊடகம் நியூஸ்வீக் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானின் இண்டர் சர்வீசஸ் இண்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அல் ஜவாஹிரிக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது, இதனை அதிகாரப்பூர்வமான சிலரிடமிருந்து இந்தத் தகவலைப் பெற்றுள்ளோம். இவர்கள், அவர் தற்போது கராச்சியில் இருப்பதாக தெரிவித்தனர்.

அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்குப் பிறகு இவர் பொறுப்பேற்ற பிறகு இவரது மறைவிடம் குறித்து முதன் முதலாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து முன்னாள் சிஐஏ அதிகாரி புரூஸ் ரெய்டல் இந்த ஊடகத்திடம் கூறும்போது, பின்லேடன் கொல்லப்பட்ட அபோத்தாபாத்தில் கிடைத்த ஆதாரங்கள் அல்-ஜவாஹிரியின் தற்போதைய இருப்பிடத்தை நோக்கி நம்மைத் திருப்பியுள்ளன, என்றார்.

மேலும் அபோத்தாபாத் அளவுக்கு அவ்வளவு எளிதில் அமெரிக்கா கராச்சியில் நுழைந்து விடுவது முடியாது, ஆப்கான் எல்லையருகே இருந்தால் பிடித்துவிடலாம் ஆனால் கராச்சி மிகக் கடினம் என்றார் அவர்.

ஜனவரி 2016-ல் ஒரு முறை அமெரிக்கப் படைகள் ஜவாஹிரியைக் குறிவைத்து நடத்திய ஆளில்லா விமான குண்டு தாக்குதலில் ஜவாஹிரி தப்பிவிட்டார். அல்ஜவாஹிரி தங்கியிருந்த இடத்துக்கு அருகில் குண்டு வெடித்தது, இதில் ஜவாஹிரி தப்பினார். தாலிபான் வழிகாட்டுதல்களின் படி இவர் கராச்சிக்கு சென்றுள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிப்பதாக இந்த ஊடகம் தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT