உலகம்

நரேந்திர மோடியை நான்சி சந்தித்தது ஏன்?: அமெரிக்கா விளக்கம்

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்திய அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்து உரையாற்றும் ஒரு பகுதியாகத் தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடனான நான்சி பாவெலின் சந்திப்பு நடைபெற்றது என்று அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.

மதச்சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டார் என்ற புகாரின் பேரில் மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது. இந்நிலை யில், திடீர் திருப்பமாக கடந்த வியாழக்கிழமை குஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகரில் மோடியை அமெரிக்கத் தூதர் நான்சி பாவெல் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித்தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியதாவது: “மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மூத்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்கும் பணியில் அமெரிக்கத் தூதரும் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க – இந்திய நட்புறவை மேம்படுத்தும் வகையில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்தே இதுபோன்ற சந்திப்புகளை தொடங்கி விட்டோம். நான்சி பாவெல், காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ஆனால், மோடியுடனான சந்திப்புக்கு ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றன. எங்களைப் பொறுத்தவரை தேர்தலின்போது இந்திய மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு அரசாக இருந்தாலும் அதனுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT