அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸைச் சேர்ந்த க்ளேர் பிக்கியுடோ 100-வது வயதில் டிப்ளோமாவை வாங்கியிருக்கிறார்! ‘80 ஆண்டுகளுக்கு முன்பு என்னால் டிப்ளோமாவைப் பெற முடியவில்லை. என் சகோதரர்கள் படிப்பைத் தொடர வேண்டும் என்பதற்காக, என் படிப்பை அம்மா நிறுத்திவிட்டார். நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஆனால் ஒரு டிப்ளோமா வாங்க முடியவில்லையே என்ற ஏக்கம் மனத்தில் இருந்துகொண்டே இருந்தது. என் மகளிடம் விருப்பத்தை வெளிப்படுத்தினேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இதோ தேர்வு எழுதி, டிப்ளோமாவைப் பெற்றுவிட்டேன். நூறாவது வயதில் என் ஆசை நிறைவேறும் என்று நான் நினைக்கவே இல்லை. டிப்ளோமா வாங்கும்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வாழ்க்கையில் ஏதோ சாதித்துவிட்டது போல இருக்கிறது’ என்கிறார் க்ளார் பிக்கியுடோ.
வாழ்த்துகள் க்ளார்!
சீனாவின் டியான்பிங் நகரத்தில் வசிக்கிறார் வாங் ஷி. 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கருவுற்று, 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்! உலகிலேயே மிக நீண்ட கர்ப்பக் காலம் வாங் ஷியுடையது என்கிறார்கள். ‘பிரசவ தேதி வந்த பிறகும் எனக்கு வலி வரவில்லை. நானும் கணவரும் மருத்துவமனைக்குச் சென்றோம். பரிசோதித்த மருத்துவர்கள் நஞ்சுக்கொடி வளர்ச்சியடையவில்லை என்றார்கள். அதற்குப் பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொண்டே இருந்தோம். 14-வது மாதம் குழந்தை பிறக்கப் போகிறது என்று ஆர்வத்துடன் காத்திருந்தோம். ஆனால் குழந்தை போதுமான அளவு வளர்ச்சியடையவில்லை என்றும் அதனால் சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே கொண்டு வர முடியாது என்றும் மருத்துவர்கள் சொன்னவுடன் மிகவும் சோர்வடைந்துவிட்டோம். பரிசோதனைகளுக்கு மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துவிட்டோம். என் எடையும் 26 கிலோ அதிகரித்துவிட்டது. எப்படியாவது குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். 17 மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 18 அன்று 3.8 கிலோ எடையில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தேன். அதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன’ என்கிறார் வாங் ஷி. 1945-ம் ஆண்டு அமெரிக்கப் பெண், 375 நாட்கள் கர்ப்பத்தைச் சுமந்திருந்தார். வாங் ஷி 517 நாட்கள். அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் வாங் ஷி 17 மாதக் கர்ப்பம் என்பதற்கு ஆதாரங்கள் வலுவாக இல்லை. அவருக்குப் பிரசவம் செய்த மருத்துவமனை, 9-வது மாதத்திலிருந்துதான் அவருக்கு மருத்துவம் செய்ததாகச் சொல்கிறது. அதற்கு முன் எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார் என்பதற்குச் சான்றுகள் இல்லை. வாங் ஷி சொன்னதன் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். அதனால் வாங் ஷி கின்னஸில் இடம்பிடிக்க மாட்டார். 200 பிரசவங்களில் ஒரு பிரசவம் நஞ்சுக்கொடி பிரச்சினையைச் சந்திக்கிறது. சிலருக்கு அது பெரிய பிரச்சினையாகவும் வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உன்னை 17 மாதம் சுமந்தேன்னு சொல்வாங்களோ வாங் ஷி!