நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் செயல்படும் ரசாயன ஆயுத ஒழிப்பு அமைப்பின் அறக்கட்டளைக்கு இந்தியா தனது பங்களிப்பாக 10 லட்சம் டாலர் (ரூ. 6 கோடி) வழங்குகிறது.
சிரியா நாட்டில் உள்ள ரசாயன ஆயுதங்களையும் அது சம்பந்தமான இதர மையங்களையும் அழிப்பதற்காக இந்தியத் தரப்பில் இந்த நிதி வழங்கப்பட உள்ளது. இந்த பங்களிப்பின் மூலம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அடுத்த மாதம் நடைபெறும் இரண்டாவது மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
சிரியா வசம் உள்ள ரசாயன ஆயுத இருப்புகளையும் அது சம்பந்தமான இதர வசதிகளையும் அழிக்க இந்த துறையில் நிபுணத்து வம் பெற்றவர்களையும் அனுப்பி வைக்க தயாராக இந்தியா இருக்கி றது என வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சிரியாவின் ரசாயன ஆயுதங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றை ஒழிக்க கால நிர்ணயம் வைத்து செயல்படுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வரவேற்கத்தக்கது.உலகிலிருந்து ரசாயன ஆயுதங்கள் அழிக்கப்படவேண்டும் என்கிற இந்தியாவின் திடமான முடிவின் வெளிப்பாடுதான் ரசாயன ஆயுத ஒழிப்பு அமைப்புக்கு உதவுவது என்கிற முடிவு என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் ஜெனிவாவில் நடக்கும் சர்வதேச மாநாட்டில் தம்மையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என இந்தியா ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்தது.
சிரியாவில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்திட அங்கு போரில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச தரப்பினர் அனைவரையும் ஒன்றாக அமரவைத்து பேசுவதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்..
சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபடும் ஐநா மற்றும் ரசாயன ஆயுத ஒழிப்பு அமைப்பு ஊழியர்களுக்கு பயிற்சி தரவும் அந்த ஆயுதங்களை அழிக்க இந்த அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பயன்படுத்திக்கொள்ள தமது நிபுணர்களை அனுப்பி வைக்கவும் இந்தியா தயார்.