உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-8 அமைப்பிலிருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் கிரைமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு பதிலடியாக இந்நடவடிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டுள்ளன.
ஜி-8 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம், நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், உக்ரைனின் கிரைமியா பகுதியை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவை ஜி-8 அமைப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்க முடிவு செய்யப்பட்டது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகள் தொடர்ந்தால், மேலும் சில பொருளாதாரத் தடைகளை விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் ரஷ்யாவின் சோச்சி நகரில் வரும் ஜூன் மாதம் நடைபெறவிருந்த ஜி-8 நாடுகளின் மாநாட்டை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. திட்டமிட்டபடி அதே ஜூன் மாதத்தில் ரஷ்யா தவிர்த்த மற்ற 7 நாடுகள் பங்கேற்கும் மாநாட்டை பிரஸ்ஸல்ஸ் நகரில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
உக்ரைனில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் இடைக்கால அரசுக்கு தேவையான உதவிகளை செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. ஜி-8 நாடுகள் அமைப்பில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்புதான் ரஷ்யா இணைந்தது குறிப்பிடத்தக்கது.