உலகம்

சீன விதிகளுக்கு கட்டுப்பட ஜப்பான் மறுப்பு

செய்திப்பிரிவு

கிழக்கு சீனக் கடல் பகுதியில் சீனா புதிய வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்த விவகாரத்தில், சீனாவின் விதிகளுக்கு கட்டுப்படுவதை நிறுத்திவிட்டதாக ஜப்பான் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் நேற்று அறிவித்தன.

கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகளை, டையாவோயு தீவுகள் என்று அழைக்கும் சீனா, அவை தனக்கு சொந்தம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சென்காகு தீவுகளை உள்ளடக்கி புதிய வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை சீனா அறிவித்தது. இந்த மண்டலத்தில் பறக்கும் விமானங்கள் முன் கூட்டியே சீன அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், இல்லாவிடில் இந்த விமானங்கள் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரித்தது. சீனாவின் இந்த தன்னிச்சையான அறிவிப்பை ஏற்க முடியாது என்று ஜப்பான் கூறிவிட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, தென் கொரியா உள்ளிட்ட ஜப்பானின் நட்பு நாடுகள் சீனாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதனிடையே ஜப்பானின் இரண்டு முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ், ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை கிழக்கு சீனக் கடல் பகுதி வழியே தங்கள் விமானம் செல்லும் நேரம் குறித்த விவரங்களை தாங்கள் சீன அதிகாரிகளிடம் அளித்ததாக தெரிவித்தன. இதற்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் புதிய வான் பாதுகாப்பு மண்டலம் தொடர்பாக சீனாவின் விதிகளுக்கு கட்டுப்படுவதை தாங்கள் நிறுத்திவிட்டதாக ஜப்பான் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. இதுகுறித்து ஜப்பான் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தனியார் விமானங்கள் சீனாவின் உத்தரவுகளை பின்பற்றக் கூடாது என ஜப்பான் அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதை தொடர்ந்து, எங்கள் தொழில் கூட்டமைப்பு சார்பில் அவசரமாக கூடி ஆலோசித்தோம்.

இதில் சீனாவின் உத்தரவுகளுக்கு இனிமேல் கட்டுப்படுவதில்லை என முடிவெடுக்கப்பட்டது. மேலும் கிழக்கு சீனக் கடல் வழியே செல்லும் வழக்கமான பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை தடுக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் மூலம் சீனா கூறியுள்ளது” என்றார். இதனிடையே ஜப்பான் நட்பு நாடுகளின் வலிமையை காட்டும் வகையில் சர்ச்சைக்குரிய தீவுகள் மீது நேற்று முன்தினம் 2 அமெரிக்க போர் விமானங்கள் பறந்து சென்றன.

SCROLL FOR NEXT