தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலா ராபன் தீவு சிறையில் இருந்தபோது தினமும் 10 மணி நேரம் பாறைகளை உடைத்ததாக சிறை அதிகாரி கிறிஸ்டோ பிராண்ட் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடியவர்களை அந்த நாட்டு அரசு ராபன் தீவில் அமைக்கப்பட்டிருந்த தனிமைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது. மறைந்த தலைவர்
நெல்சன் மண்டேலாவும் இந்தச் சிறையில் 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கு நாள்தோறும் நான்கு, நான்கு கைதிகளாக இரும்புச் சங்கிலியில் பிணைத்து கடினமான சுண்ணாம்பு பாறைகளை உடைக்கச் செய்வது வழக்கம். அதன்படி, மண்டேலாவையும் சக கைதிகளோடு சங்கிலியில் பிணைத்து சுண்ணாம்பு பாறைகளை உடைக்கச் செய்தனர்.
நாள்தோறும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மண்டேலா பாறைகளை உடைத்தார். வெள்ளை நிற சுண்ணாம்பு பாறைகளோடு அவரது வாழ்க்கை பல ஆண்டுகள் உருண்டோடியது.
மண்டேலா இருந்த சிறைப் பகுதியின் அதிகாரி கிறிஸ்டோ பிராண்ட் இந்தத் தகவல்களை இப்போது செய்தியாளர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார். மண்டேலா குறித்து அவர் மேலும் கூறியதாவது:
1978-ம் ஆண்டில் ராபன் சிறையில் நான் ஜெயிலராக பணியாற்றினேன். அப்போது எனக்கு 18 வயது, மண்டேலாவுக்கு 60 வயதிருக்கும். இருவரும் பரஸ்பரம் அன்போடு பேசிக் கொள்வோம். மண்டேலா எப்போதும் தூய்மையாக உடை அணிந்திருப்பார். முடிந்தவரை அனைத்து கைதிகளுக்கும் உதவி செய்வார்.
அவர் சிறைக் கைதியாக இருந்தால்கூட என்னிடம் ஒரு தந்தையைப் போலவே நடந்து கொண்டார். சட்டம் படித்திருந்த மண்டேலா, பல்வேறு நேரங்களில் சிறை அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்து கைதிகளுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தார். அவர் மீதுள்ள பாசத்தால் ரொட்டித் துண்டுகளை சிறைக்குள் கடத்தி வந்து அவருக்கு கொடுத்துள்ளேன். தலைமுடி எண்ணெயும் கடத்திக் கொண்டு வந்துள்ளேன்.
மண்டேலா விடுதலை அடைந்து 1994-ல் அதிபராக பதவியேற்றார். அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன். என்னை அடையாளம் தெரிந்துகொண்டு அருகில் அழைத்த மண்டேலா, ‘இவர் யார் தெரியுமா? என்னுடைய ஜெயிலர்’ என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மண்டேலாவை எனது குடும்பத்தினரோடு சந்தித்துப் பேசினேன். என்னுடைய பேரக் குழந்தையை அவர் அன்போடு கொஞ்சினார். சிறை வாழ்க்கை குறித்து என்னோடு வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஒரு மாபெரும் தலைவர். அவரது மறைவு என்னை வெகுவாகப் பாதித்துள்ளது என்றார்.
பாழடைந்த நிலையில் மண்டேலாவின் வீடு
ஜோகன்னஸ்பர்க் நகரின் புறநகர்ப் பகுதியான அலெக்சாண்ட்ரா குடிசைப் பகுதியில் தன்னுடைய இளமைப் பருவத்தில் மண்டேலா வசித்தார். அவருக்கு 20 வயதிருக்கும்போது அங்குள்ள மிகச் சிறிய வீட்டில் அவர் குடியிருந்தார்.
“மின் வசதி கிடையாது, தண்ணீர் வசதி கிடையாது, ஆனாலும் அந்த வீட்டில் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன்” என்று தனது சுயசரிதையில் மண்டேலா குறிப்பிட்டுள்ளார். அலெக்சாண்ட்ராவில் அவர் வாழ்ந்த வீடு தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது.