இந்தியா, வங்கதேசம், பூடான், ஆப்கன் ஆகிய நாடுகள் விலகியதையடுத்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெறுவதாக இருந்த சார்க் நாடுகள் மாநாடு ரத்து செய்யப்பட்டதாக காத்மண்டுவின் மூத்த ராஜாங்க அதிகார வட்டாரங்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறியுள்ளது.
இஸ்லாமாபாதில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சார்க் நாடுகள் மாநாட்டிலிருந்து இந்தியா விலகியதையடுத்து வங்கதேசம், பூடான், ஆப்கன் ஆகிய நாடுகளும் பங்கேற்கப்போவதில்லை என்று விலகியதையடுத்து சில மணி நேரங்களில் இந்த சார்க் மாநாட்டின் தலைமை நேபாள், சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தது.
“4 நாடுகள் பங்கேற்க விருப்பமில்லை என்று கூறியுள்ள நிலையில் மாநாட்டை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை. நடப்பு சார்க் தலைமை வகிக்கும் நேபாள் மாநாட்டுக்கு முந்தைய கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வழிவகை காண வேண்டும். இந்தச் சூழ்நிலையில் வேறு எதுவும் செய்வதற்கில்லை. எனவே உறுப்பு நாடுகள் பங்கேற்கவில்லை என்பதால் சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்டதாக நாங்கள் அறிவிக்கவுள்ளோம்” என்று நேபாள் ராஜாங்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பங்கேற்க மறுத்த நாடுகள் வேறு இடத்தில் நடத்தினால் கலந்து கொள்வோம் என்றும் தெரிவிக்காததால் இதற்கு வேறு ராஜிய மட்ட தீர்வுதான் காணவேண்டும் என்பதை நேபாள் உணர்வதாக தெரிவித்துள்ளது.
யூரியில் நடந்த தாக்குதல்கள் காரணமாக பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என்று நேற்று வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் பிரச்சினையை முன்னிறுத்திதான் வங்கதேசம், ஆப்கன் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக காத்மாண்டுவுக்கான தங்களது செய்திக் குறிப்பில் இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
வங்கதேச உயர்மட்ட தரப்பு ஒன்றும் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு கூறும்போது, இஸ்லாமாபாத் சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்டது அதிகாரபூர்வ அறிவிப்பாக விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தனர்.
1971 போரில் போர்க்குற்றங்கள் இழைத்ததாக உயர்மட்ட அரசியல் தலைவர்களுக்கு மரண தண்டனை விதித்தது தொடர்பாக பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் உறவுகள் சிக்கலடைந்தன. இதனையடுத்து பாகிஸ்தானின் செயல்பாடுகளைக் காரணம் காட்டி கலந்து கொள்ள வங்கதேசம் மறுத்தது.
பூடான் அரசும் உறுப்பு நாடுகளின் கவலைகளை பகிர்ந்து கொள்வதாகக் கூறி சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை என்று தலைமை நேபாளுக்கு தெரிவித்து விட்டது.
மாநாடு ரத்து என்பது ஏறக்குறைய உறுதியானதால் சார்க் மாநாட்டின் எதிர்காலம் நிச்சயமின்மைக்கு சென்றுள்ளது, இதனால் உயர்மட்ட தூதர்கள் சிலர் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கியுள்ளனர்.