உலகம்

அமெரிக்காவில் வேலையற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது

ஏபி

அமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 2 லட்சத்துக்கு 64 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த முறையைவிட 23 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவு. மேலும் 2000-ம் ஆண்டுக்குப் பின் இப்போதுதான் வேலையில்லாதோர் உதவித்தொகைக்கு இவ்வளவு குறைவாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க தொழிலாளர் துறை அமைச்சகம் கூறியிருப்பது: கடந்த 14 ஆண்டுகளில் அமெரிக்க மக்கள்தொகை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.

அப்படியிருந்தும் வேலையில்லாதோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது நல்லதொரு விஷயம். பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பது, பங்கு சந்தைகள் உயர்ந்திருப்பது போன்றவை இதற்கு முக்கியக் காரணம். கடந்த மாதம் மட்டும் 2 லட்சத்து 48 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இது கடந்த இரு மாதங்களைவிட அதிகம். வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.

தாங்கள் எதிர்பார்க்கும் திறமையுடைய பணியாளர்கள் கிடைப்பது இல்லை என்பது பல நிறுவனங்களின் புகாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT