உலகம்

மாசிடோனியர் - அல்பேனியர்களுக்கு இடையேயான இனப் பிரச்சினை காரணமாக மாசிடோனியா நாடாளுமன்றத்தில் திடீர் தாக்குதல்: எம்.பி.க்கள் உட்பட 77 பேர் காயம்

செய்திப்பிரிவு

மாசிடோனியோ நாட்டின் நாடாளுமன்றத்துக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் எம்.பி.க்கள், பாதுகாவலர்கள் உட்பட 77 பேர் காயமடைந்தனர்.

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மாசிடோனியா நாட்டில் இனக் கலவரம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் மாசிடோனியர்கள். 25 சதவீதம் பேர் அல்பேனியர்கள்.

அங்கு மாசிடோனியா புரட்சிகர கட்சியும் ஐக்கிய மாசிடோனியா ஜனநாயக கட்சியும் இணைந்து சுமார் 10 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடத்தின. கடந்த டிசம்பரில் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கூட்டணி உட்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து முக்கிய எதிர்க்கட்சியான மாசிடோனியோ ஐக்கிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோரன், அல்பேனிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் அதிபர் ஜார்ஜ் இவானோவ் ஆட்சி அமைக்க அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இதனால் மாசிடோனியாவில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று மாசிடோனியர்களும் அல்பேனியர்களும் தனித்தனியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை மாசிடோனியா நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அல்பேனிய இனத்தைச் சேர்ந்த ஹாபெரி என்பவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாசிடோனியா இனத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தில் திடீரென புகுந்து அல்பேனிய எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத் தினர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ஜோரன் உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட 77 பேர் காயமடைந்தனர்.

இதேநிலை நீடித்தால் இனப் பிரச்சினை காரணமாக மாசிடோனியா இரண்டாக உடையக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜோரன்.

படம்: ராய்ட்டர்ஸ்

SCROLL FOR NEXT