இந்திய - அமெரிக்க உறவை ட்ரம்ப் நிர்வாகம் சாதகமாகவே பார்ப்பதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாகவே இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் பயணம் செய்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெய்சங்கர் கூறும்போது, "ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஒட்டுமொத்த ஆலோசனைகளும் நம்பிக்கையை அளித்துள்ளன.
இந்திய - அமெரிக்க நல்லுறவை ட்ரம்ப் நிர்வாகம் சாதகமாகவே பார்க்கிறது. மேலும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய - அமெரிக்க உறவை முன்னோக்கி எடுத்துச் செல்ல நிறைய சாதகமான வாய்ப்புகள் உள்ளன" என்றார்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கரின் அமெரிக்க பயணம் இந்திய - அமெரிக்க உறவில் முன்னேற்றம் ஏற்பட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், வர்த்தகச் செயலாளர் ராஸ், உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜான் கெல்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முன்னதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை அன்று ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு இந்திய வெளியுறவுச் செயலாளர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.