எல்லையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அருணாசலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த மாநிலத்தில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவியும் வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் எல்லைப் பகுதியில் ரூ.175 கோடி செலவில் புதிதாக 54 எல்லைச் சாவடிகளை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சீன பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் யாங் யுஜின், பெய்ஜிங்கில் கூறியதாவது:
எல்லையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடக்கூடாது. அமைதியை ஏற்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அருணாசலப் பிரதேசத்தை சர்ச்சைக்குரிய பகுதியாகவே சீனா கருதுகிறது. இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றார்.