உலகம்

ஆட்சி நிர்வாகத்துக்கு குறுக்கீடாக நிற்கிறது ராணுவம்- இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புகார்

மீரா ஸ்ரீனிவாசன்

வடக்கு மாகாண சபையின் ஆட்சி நிர்வாகத்துக்கு குறுக்கீடாக ராணுவம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்தவரும் மாகாண முதல்வருமான விக் னேஸ்வரன்.

‘வடக்கு மாகாணத்தில் ஜன நாயகம் மலரச்செய்தல்’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை மாநாடு நடை பெற்றது. கொழும்பைச் சேர்ந்த சர்வதேச இன ஆய்வியல் மையம் ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் பங்கேற்று இலங்கை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான முதல்வர் விக்னேஸ்வரன் பேசியதாவது: போருக்குப் பிந்தைய நிலையில் ஆட்சி நிர்வாகம் என்று வரும்போது அதற்கு மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் முக்கியத் தேவைகள் என்ன என்பதை அறிவதற்கான முயற்சியில் மாகாண கவுன்சில் இறங்கியுள்ளது.

நல்ல நிர்வாகம் என்பதன் அர்த் தம் எப்படி முடிவு எடுக்கிறோம் என்பதுதான்.

ஆட்சி நிர்வாகம் எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறது என்பதை வைத்தே ஆளுமை சார்ந்த விஷயங்களில் அரசு திட்டமிடுகிறது. மாகாண நிர் வாகத்துக்கு குறுக்கீடாக இருப்பது ராணுவம்தான்.

வடக்கு மாகாணமானது ராணுவ முகாம்கள் நிறைந்த பகுதியாகி விட்டது.

உள்நாட்டுப் போரின்போது இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் இன்னும் சொந்த இடம் திரும்ப முடியாமல் தவிக்கின்றன. தனியார் நிலங்களையும், சில இடங்களில் விவசாய நிலங்களையும் இலங்கை ராணுவம் கையகப்படுத்திக் கொண்டுள்ளது.

நிலம் தமக்கே சொந்தமானதாக இருந்தாலும் அதில் முகாமிட்டுள்ள ராணுவத்தினர் பயிரிடும் விளை பொருள்களை உள்ளூர் பகுதி விவசாயிகள் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலை யில் இருக்கின்றனர். பெண்களும் குழந்தைகளும் அவ்வப்போது ராணுவத்தினரின் மிரட்டலுக்கு உள்ளாகி வேதனைப்படுகிறார்கள்.

ஏற்றத்தாழ்வு நிலைமை சமூகத்துக்கு பெரும் சவால் மிக்கதாகிவிட்டது. வடக்கு மாகாணத்திலிருந்து படித்தவர்களும் வல்லுநர்களும் வெளியேறி விட்டதால் நிலை மையை மாற்றிட இந்த பகுதிக்கு தொழில் வல்லுநர்களுக்கான தேவை ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலிருந்து வேறு நாடுகளுக்கு சென்று விட்ட மக்கள் மீண்டும் திரும்ப உதவும்படி வலியுறுத்தி இலங்கை அரசுடன் பேசி வருகிறோம்.

தேர்தலில் பெருவாரியாக வெற்றிபெற்று மாகாண சபையை பிடித்தது தமிழ் தேசிய கூட்டணி. எனினும், இந்த அரசு பலவகைகளில் இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டி வருகிறது.

போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லை. கட்டமைப்பு வசதி போதுமானதாக இல்லை. ஆளுநராக உள்ள இலங்கை ராணுவ முன்னாள் மேஜர் ஜென ரலுடன் கருத்து வேறுபாடு வரு கிறது. பணிபுரியும் ஊழியர்கள் ஆளுநர் சொல்வதை கேட்டு அதன்படி செய்பவர்களாக இருந்து பழகிவிட்டார்கள்.

இந்த பிரச்சினைகளில் சில வற்றை அண்மையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்த போது எடுத்துரைத்தேன். அந்த சந்திப்புக்குப் பிறகு முன்னேற்றம் தெரிகிறது என்றார் விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆய்வாளரும் அரசியல் பொரு ளாதார நிபுணருமான அகிலன் கதிர் காமர் பேசியதாவது: உள்நாட்டுப் போர் 2009ல் முடிவுக்கு வந்த வுடன், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டது இலங்கை அரசு. தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதிலேயே காலத்தை வீணடித்தது தற்போதைய அரசு. கீழிருந்து மேல் என்ற அணுகுமுறையில்தான் ஜனநாயக மயமாக்கம் பலன் தரும். அதற்கு சமூக அமைப்புகளை வலுப்படுத் துவது அவசியமானது என்றார்.

தன்னார்வ தொண்டு நிறு வனத்தைச் சேர்ந்த ராகா அல்பான்சஸ் பேசுகையில், “வடக்கு மாகாணத்தில் பொது மக்களுக்கு உணவு கிடைப்பதில் பிரச்சினை காணப்படுகிறது. கிராமப் புற மக்கள் கடனாளிகளாகி விட்டனர். உளைச்சலில் உள்ள அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT