இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு எரிமலை சீற்றமடைந்துள்ளதால் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 12,300 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
சினபங் என்ற எரிமலை கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து வெடித்து வருகிறது. இந்நிலையில், அந்த எரிமலை சனிக்கிழமை கடும் சீற்றமடைந்தது. ஒருசில மணி நேரங்களில் அடுத்தடுத்து 8 முறை வெடித்ததால் தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது.
இதனால், எரிமலையைச் சுற்றியுள்ள பகுதி புகை மண்டலமாகக் காட்சி அளிப்பதுடன், சாம்பல் படிந்து வருகிறது. எரிமலை வெடித்தபோது பாறை துகள்கள் சுமார் 8 கி.மீ. சுற்றளவு வரை சிதறி விழுந்தன. இதனால் சனிக்கிழமை இரவிலிருந்தே அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த எரிமலை சீற்றமடையத் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 12,300 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
"எரிமலை வெடிப்பின்போது பயங்கர சத்தம் கேட்டதுடன் பூமி அதிர்ந்தது. அதனைத் தொடர்ந்து பாறைத் துகள்கள் மழைபோல பொழிந்தன. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உதவி கேட்டு கூக்குர லிட்டனர். எனினும், உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து தகவல் இல்லை" என அரசு அதிகாரி ராபர்ட் பெரங்கிநங்கின் தெரிவித்தார்.
சினபங் எரிமலையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கிராம மக்கள் வெளியேறுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ தெரிவித்தார்.