உலகம்

உலக மசாலா: வேக வைக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!

செய்திப்பிரிவு

ஜெர்மனியின் யுடின் காட்டில் உள்ள ஓர் ஓக் மரம், தனக்கென தபால் முகவரியைப் பெற்றிருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான காதலர்கள் இந்த மரத்துக்குக் கடிதங்கள் எழுதி அனுப்பியிருக்கிறார்கள். இவை அனைத்தும் காதலைச் சேர்த்து வைக்கும்படிச் சொல்லும் வேண்டுதல் கடிதங்கள். பெரும்பான்மையான காதலர்கள் திருமணத்தில் இணைந்திருக் கிறார்கள்! காதலர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் இந்த ஓக் மரத்துக்கு 500 வயதாகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காட்டிலாகா அதிகாரியின் மகளை, சாக்லேட் உற்பத்தியாளரின் மகன் காதலித்தார். அதிகாரி காதலை ஏற்கவில்லை. காதலர்கள் ரகசியமாக இந்த ஓக் மரத்தில் உள்ள பொந்தில் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டனர். 1891-ம் ஆண்டு ஜூன் 2 அன்று இருவருக்கும் இந்த மரத்தின் கீழ் திருமணம் நடைபெற்றது. இந்தக் கதை அப்படியே வெளியில் பரவியது. காதலர்கள், தங்கள் காதல் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக மரப்பொந்தில் கடிதங்களை வைக்க ஆரம்பித்தனர். நேரில் வர முடியாதவர்கள் தபால் மூலம் கடிதங்களை அனுப்பினர். ஒருகட்டத்தில் கடிதங்களின் எண்ணிக்கை

அதிகமானது. காதலர்களைச் சேர்த்து வைக்கும் ஓக் மரத்துக்கென்று தபால் முகவரி அளிக்கப்பட்டது. பின்னர் உலகம் முழுவதிலுமிருந்து கடிதங்கள் வர ஆரம்பித்தன. 3 மீட்டர் உயரத்திலிருக்கும் மரப்பொந்தில் கடிதங்களை வைக்க வேண்டும் என்றால் ஓர் ஏணியில் ஏறித்தான் செல்ல வேண்டும். இங்குள்ள கடிதங்களை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம், படிக்கலாம், பதில்கூட அனுப்பலாம். பெரும்பாலான காதலர்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது. நூறு திருமணங்கள் இந்த மரத்தடியிலேயே நடந்திருக்கின்றன.

காதலர்களைத் திருமணத்தில் இணைக்கும் அதிசய மரம்!

குழந்தைகளுக்கு வேக வைக்காத குக்கீ மாவைச் சாப்பிடப் பிடிக்கும். நியூயார்க்கில் உள்ள டிஓ குக்கீ கடையில் வேக வைக்காத குக்கீ மாவுகளைச் சுவைக்கப் பெரியவர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நிறுவனர் கிறிஸ்டென் டோல்மன், “ஒருமுறை குக்கீ கடைக்குச் சென்றோம். அங்கே குக்கீகள் தீர்ந்துவிட்டன. வேக வைக்காத மாவை வாங்கிச் சுவைத்தோம். பிரமாதமாக இருந்தது. விரைவில் குக்கீ மாவு கடை ஒன்றை ஆரம்பிக்க முடிவெடுத்தேன். என் திருமணத்துக்கு 2 மாதங்களுக்கு முன்பு கோமா நிலைக்குச் சென்றேன். 3 வாரங்களுக்குப் பிறகு சுயநினைவு வந்தது. வாழ்க்கை மிகவும் சிறியது. அதில் என் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக குக்கீ மாவு கடையை ஆரம்பித்துவிட்டேன். விதவிதமான சுவைகளில் குக்கீ மாவுகளை அறிமுகம் செய்தேன். வேகமாகப் பிரபலமானது. காலை 10 மணிக்குக் கடையைத் திறப்போம். 8.30 மணிக்கே மக்கள் வரிசையில் காத்திருப்பார்கள். ஒரு நாளைக்கு 680 கிலோ குக்கீ மாவுகளை விற்பனை செய்கிறோம். 13 சுவைகளில் குக்கீ மாவுகள் கிடைக்கின்றன. ஒரு கப் குக்கீ மாவு 267 ரூபாய். எங்கள் குக்கீ மாவு பாதுகாப்பானது. மாவை வறுத்துதான் பயன்படுத்துகிறோம்” என்கிறார் கிறிஸ்டென் டோல்மன்.

வேக வைக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!

SCROLL FOR NEXT