உலகம்

உலக மசாலா: அன்பானவர்களின் இதயத் துடிப்பை உணர வைக்கும் மோதிரம்!

செய்திப்பிரிவு

உலகிலேயே அதிநவீன மோதிரம் Touch HB Ring. இது காதலர்களுக்கும் தம்பதியர்களுக்குமான மோதிரம். இதை அணிந்து கொண்டால் உங்கள் அன்புக் குரியவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும். போன், ஸ்கைப் என்று எத்தனையோ கருவிகள் உறவுகளுக்கு இடையே இருக்கும் தூரத்தைக் குறைத்துவிடுகின்றன. ஆனால் அவற்றைவிட இந்த மோதிரம் இன்னும் நெருக்கத்தை அதிகரிக்கிறது. பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் கணவனும் மனைவியும் தனித்தனியாக இருந்தாலும் மோதிரத்தின் மூலம் அவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும்!

அருகில் இருப்பது போலவே தோன்றும். ஸ்மார்ட்போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, கணவன் அல்லது மனைவியின் தகவல்களைக் கொடுக்க வேண்டும். பிறகு மோதிரத்தை அழுத்தினால் இதயத் துடிப்பைக் கேட்கலாம்.

இந்தச் சின்னஞ்சிறு மோதிரத்துக்குள் பேட்டரி, சார்ஜிங் கனெக்டர், மதர்போர்ட், சென்சார்கள் என்று ஏராளமான விஷயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தண்ணீர் புகாதவாறு அமைக்கப்பட்டிருக்கிறது. 2 தங்க மோதிரங்கள் 2 லட்சம் ரூபாய். துருப்பிடிக்காத உலோகங்களால் செய்யப்பட்டிருக்கும் 2 மோதிரங்கள் 40 ஆயிரம் ரூபாய். மோதிரங்களின் தரத்துக்கு ஏற்ப விலையும் இருக்கும். ஆப்பிள் கைக்கடிகாரங்களில் பதிவு செய்யப்பட்ட இதயத் துடிப்புகளைத்தான் கேட்க முடியும். ஆனால் டச் மோதிரங்களில் நேரடியாகவே இதயத் துடிப்புகளை அறிய முடியும்.

அன்பானவர்களின் இதயத் துடிப்பை உணர வைக்கும் மோதிரம்!

ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறது ஒரு குடும்பம். காரோலா க்ரிஸ்பாச்சும் ஆண்ட்ரூவும் இரு மகள்கள், 4 பேரக் குழந்தைகளுடன் 1,400 மைல்கள் பயணம் செய்து, ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். “ஜெர்மனி எல்லோரும் நினைப்பதுபோல அமைதியான நாடு இல்லை. அகதிகளுக்குப் புகலிடம் கொடுத்ததில் இருந்து ஜெர்மனி மாறிவிட்டது. அங்கே குழந்தைகள் வளரக்கூடிய இனிமையான சூழல் இல்லை. திடீரென்று கிளம்பியதால் சுற்றுலா விசாவில்தான் ரஷ்யா வந்தோம். இங்கே வந்த பிறகு அரசியல் அடைக்கலம் கோரியிருக்கிறோம். இன்னும் அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் ரஷ்ய மக்கள் எங்களிடம் காட்டும் அன்புக்கும் உதவிக்கும் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. இவ்வளவுக்கும் எங்களுக்கு இன்னும் ரஷ்ய மொழி நன்றாக வரவில்லை. ஒரு கடை வைத்து பிழைப்பை நடத்தி வருகிறோம்.

ஜெர்மனியை விட எல்லா விதங்களிலும் ரஷ்யா சிறந்த நாடாக இருக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மிகவும் பாதுகாப்பான நாடு. சொந்த நாட்டைவிட இங்கேதான் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்கிறோம். எங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டோம் என்பதைத் தவிர எங்களுக்கு வேறு வருத்தங்கள் இல்லை. 8 மாதங்களாக ரஷ்யாவில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அரசியல் அடைக்கலம் கிடைத்துவிட்டால் இன்னும் நிறைவாக இருப்போம்’’ என்கிறார் ஆண்ட்ரூ. உலக நாடுகளில் ஜெர்மனிக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஆண்ட்ரூ சொல்லும் காரணத்தை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அரசியல் அடைக்கலம் இன்னும் வழங்கவில்லை. இந்தக் குடும்பத்தை வெளியேறவும் சொல்லவில்லை.

அடைக்கலம் கொடுக்கும் நாட்டில் இருந்தே அடைக்கலம் தேடி வந்தது விநோதமாக இருக்கிறதே...

SCROLL FOR NEXT