உலகம்

விஷக்கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

இத்தாலியில் உள்ள நேப்லஸ் நகரில் திருட்டுத்தனமாக மாபியா கும்பல் விஷக் கழிவுகளை கொட்டுவதாக கூறி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சனிக்கிழமை சுமார் 1 லட்சம் பேர் ஆர்ப்பாட்டத்துக்கு திரண்டிருந்தனர். மாபியா கும்பல் சட்ட விரோதமாக இந்த விஷக்கழிவுகளை கொட்டுவதாகவும், அதிலிருந்து வெளியாகும் நச்சுப்புகை புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

நச்சுப்புகையால் புற்றுநோய் ஏற்பட்டு பலியான தமது உறவினர்கள் புகைப்படத்தையும் ஆர்ப்பாட்டத்தில் சிலர் தமது கைகளில் வைத்திருந்தனர்.

நேப்லஸ் நகரின் பல இடங்களில் மாபியா கும்பல் விஷக்கழிவுகளை திருட்டுத்தனமாக கொட்டுகிறது. இதனால் நிலம், தண்ணீர் மாசுபட்டு அவற்றை பயன்படுத்திட முடியாமல் போய்விட்டது. நச்சு கலந்த நிலத்தையும் தண்ணீரையும் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்தக்கூடியவையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

விஷக்கழிவுகளை கொட்டி எரிப்பதால் நேப்லஸுக்கும் கசேர்ட்டா பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி நச்சு வாயு மண்டலமாக மாறி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறது என்று உள்ளூர் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நேப்லஸ் நகர மேயர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த பகுதியில் நச்சு பாதிப்புக்கு உள்ளாகாத நிலத்தில் விளைந்த கோதுமையில் தயாரிக்கப்பட்ட 3 டன் ரொட்டி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

இத்தாலியின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள 440 நிறுவனங்கள் கடந்த 22 ஆண்டுகளில் ஒரு கோடி டன் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி எரித்துள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT